பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 8, 2011

முல்லைப் பெரியாறு பிரச்சினையால் தமிழகம், மற்றும் கேரள எல்லையில் நேற்றும் பதற்றம் நீடித்தது. கேரளா, இடுக்கி மாவட்டத்தில், ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால், அவர்களில் பெரும்பாலானோரின் பயணம் ரத்தாகியுள்ளது. கம்பம் பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. உணவு விடுதிகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. முச்சக்கர வண்டிகள் கூட ஓடவில்லை.


இரு மாநில எல்லையில் பதற்றம் தொடர்வதால் காவல்துறை, தமிழ்நாடு சிறப்புப் படை காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம், தமிழகத்தில் இருந்து தோட்டங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை நேற்றுமுன்தினம் மாலை, கேரள போராட்டக்காரர்கள் அடித்துத் தாக்கினர்.


குமுளி பகுதி வழியாக சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை சிலர் தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த ஐயப்ப பக்கதர்களை வாகனங்களில் இருந்து இறக்கி விரட்டித் தாக்கினர். மேலும் அங்கிருந்த தமிழர்களின் உணவுவிடுதிகள், கடைகள் ஆகியவற்றை உருட்டுக் கட்டையால் தாக்கி சேதப்படுத்தினர். சில நாட்களாக நடந்து வரும் இக்சம்பவங்களால் அச்சமடைந்த வணிகர்கள் தங்களது கடைகளை மூடினர். ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் எத்தாபாளையம் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து கூடலூர் வரை 11 கி. மீ. தூரத்திற்கு வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தப்பட்டன. அவற்றில் பயணித்த பக்தர்கள், உணவுகூட கிடைக்காமல் அவதியுற்றனர். இதனால், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் பயணம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்திலிருந்து செல்ல இருந்தவர்கள், தங்கள் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். டிசம்பர் 27ம் தேதி வரை, மண்டல பூஜைக்காக, சபரிமலை நடை திறந்திருக்கும் என்பதாலும், டிசம்பர் 30ம் தேதி மீண்டும் மகர ஜோதிக்காக நடை திறக்கப்படும் என்பதாலும், பிரச்னை தீரும் வரை காத்திருந்து, பின், பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் கேரளாவில் நேற்று முன்தினம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசித் தீர்க்கலாம் என்று தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்றுக்கு வெளியே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்க்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழகத்திற்குக் கோரிக்கை விடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கேரள மக்களின் பாதுகாப்பு தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முடிவை விரைந்து எடுக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை உடனடியாக 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துத் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்றார்.


அதேநேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளில் கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். அற்ப நோக்கம் கொண்ட அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 116 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காகவே, அதன் பாதுகாப்பை ச்நதேகிக்க வேண்டியதில்லை காவிரியில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகளாக திடமாக உள்ளது. அதே சுண்ணாம்புச் சாந்து மூலம் தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கேரளாவும் நிலநடுக்க மண்டலத்தின் மூன்றாவது பிரிவில் தான் இருக்கிறது என்பதால், நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படும் என்பதற்கும், எந்தவிதமான அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. பல நூற்றாண்டுகளாக இரு மாநில மக்களுக்கும் இடையில் நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, நல்லெண்ணத்தைச் சீர்குலைத்துவிடாதீர்கள் என, கேரள மக்களை வேண்டிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


அதே நேரத்தில் முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு வன்முறையால் தீர்வு காண முடியாது என்று தமிழக ஆளுநர் கே. ரோசய்யா தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]