உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சுரிமை வேண்டும் என சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கோரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 14, 2010


பேச்சுரிமைக்கான தடைகளை நீக்கக்கோரி சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 23 பேர் அந்நாட்டு அரசுக்கு திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.


சீன அரசியலமைப்பின் படி அனைத்து மக்களுக்கும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளதெனினும், நடைமுறையில் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


பொதுமக்கள் இணையத்தில் சுதந்திரமாகத் தமது கருத்துக்களைக் கூற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களுக்கு கூடுதல் மரியாதை அளிக்கப்ப வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.


அக்டோபர் 1 ஆம் நாள் தேதியிடப்பட்டுள்ள இக்கடிதம் அக்டோபர் 11 இல் இணையத்தில் வெளியானது. இவ்வாண்டுக்கான நோபெல் அமைதிப் பரிசு சீன அதிருப்தியாளர் லியூ சியாபோவுக்கு வழங்கப்பட்ட சில நாட்களில் இநதக் கோரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


"எமது அரசியலமைப்பை அவர்கள் மீறுகிறார்கள், ஒருவரின் பங்களிப்பை வெளியிட வேண்டாம் என தொலைபேசியில் அறிவுறுத்தப்படுகிறது, அல்லது குறித்த ஒரு நிகழ்வு குறித்து ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


"தொலைபேசியில் கதைப்பவர்கள் தமது பெயர்களைத் தெரிவிப்பதில்லை."


இக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் பலர் முன்னர் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கியவர்கள். இவர்களுள் முன்னாள் தலைவர் மா சே துங்கின் தனிப்பட்ட செயலாளராக இருந்தவர், வேறொருவர் ”மக்கள் தினசரி”யின் ஆசிரியராக இருந்தவர்.


சீன நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், பத்திரிகைத் தணிக்கை, மற்றும் நூல் வெளியிடுதலில் உள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றை நீக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


மூலம்