பேராசிரியர் பெரியார்தாசன் இசுலாம் மதத்தைத் தழுவினார்
ஞாயிறு, மார்ச் 14, 2010
- 17 பெப்ரவரி 2025: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 17 பெப்ரவரி 2025: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 17 பெப்ரவரி 2025: தூத்துக்குடி செய்தி இன்று
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் வெள்ளிக்கிழமையன்று இசுலாம் மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் என சவுதி அரேபியாவிலிருந்து வெளியாகும் ”அரப் நியூஸ்” செய்தியாளர் அறிவித்துள்ளார்.
பேராசிரியர் பெரியார்தாசன் தன் பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டதாகவும் அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
வெள்ளியன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெரியார்தாசன் தான் இசுலாத்தைத் தழுவியதை பகிரங்கமாக அறிவித்தார். அரப் நியூஸ் செய்தியாளருக்கு அவர் அளித்த நேர்காணலில், ”உலகிலுள்ள மதக் கொள்கைகளில் கடவுளின் வழிகாட்டல்களை நேரடியாகப்பின்பற்றும் மதம் இசுலாம் மட்டுமே என்றார். பிறசமய வேதங்களையும் ஆய்வு செய்தவகையில் குரான் தவிர ஏனையவை கடவுளின் வார்த்தைகளல்ல. இதுமட்டுமே பெருமகனார் முகமது நபிக்கு அருளப்பட்டது போன்றே இன்றும் உள்ளது”, என்றார்.
பெரியார்தாசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேஷாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.
கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் பகுதி-நேரப் பேராசிரியரான பெரியார்தாசன், கருத்தம்மா உள்ளிட்ட சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். பெண்சிசுக்கொலை குறித்த இப்படம் தேசிய விருது பெற்றது.
”பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வந்த நான், மதங்கள் மட்டுமே இவ்வுலகிலிருந்து மறு உலகம் செல்வதற்கான வழி என்பதை பிற்காலத்தில் உணர்ந்தேன்”, என்றார்.
முஸ்லிம் மதத்தில் இணைந்துள்ள பேரா.பெரியார்தாசன் புனித நகரமான மக்காவுக்கு உம்ரா எனும் புனிதப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
மூலம்
[தொகு]- Indian atheist embraces Islam, அரபுநியூஸ், மார்ச் 12, 2010
- பேரா.பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார், மார்ச் 13, 2010