உள்ளடக்கத்துக்குச் செல்

பொற்கோயில் தாக்குதல் நிகழ்வில் பிரித்தானியாவின் பங்கு குறித்து விசாரணை ஆரம்பம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 14, 2014

புளூஸ்டார் நடவடிக்கை என்று அறியப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் இந்திய இராணுவம் சீக்கியப் பொற்கோயிலினுள் நுழைந்த சீக்கிய புரட்சிவாதிகளை கொலைசெய்தது. இந்நிகழ்வு இந்தியாவில் பெரும் வரலாற்றுத் தாக்கங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்திரா காந்தி அவர்களின் கொலை மற்றும் அதைத்தொடர்ந்த சீக்கியர்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் அதில் கொல்லப்பட்ட 5000 வரையான சீக்கியர்கள் வரை பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.


பொற்கோயிலின் தோற்றம்

30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காக்கப்பட்ட ஆவணங்களை பொதுவில் விடுவது பிரித்தானிய வழக்கமாகும். அவ்வகையில் வெளியிடப்பட்ட சில ஆவணங்கள் 1984ம் ஆண்டு பொற்கோயில் மீது இந்திய இராணவம் நடத்திய தாக்குதலிற்கு பிரித்தானியா ஆதரவு வழங்கியதாகத் தெரியவருகின்றது. இதை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வட்சன் அவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக விசாரணைசெய்யுமாறு பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரோன் உத்தரவிட்டுள்ளார்.


6 பெப்ரவரி 1984 என திகதியிடப்பட்ட ஆவணம் ஒன்றில் இந்தியா பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு ஆலோசனை வழங்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடையம் தொடர்பாக வெளியுறவு செயலர் பிரதமர் கூறியபடி செயற்படவேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


23 பெப்ரவரி 1984 என திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தில், வெளியுறவு செயலர் இந்தியாவின் கோரிக்கைக்கு சாதகமாகப் பதில்தர பிரதமர் மாக்ரட் தட்சரின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வான்சேவை படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி இந்தியா சென்று தாக்குதல் உத்திகளை வகுத்துக்கொடுத்ததாகவும், அவற்றை இந்திரா காந்தி பரீசீலித்து ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெளியுறவுச் செயலர் இந்தியா அந்த திட்டத்தை விரைவில் செயற்படுத்தவிருப்பதாகவும் நம்புவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வட்சன் பிரித்தானிய அரசு இந்தச் சம்பவம் தொடர்பான மேலும் பல ஆவணங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் அவற்றையும் பொதுவில் விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மூலம்

[தொகு]