உள்ளடக்கத்துக்குச் செல்

போப்பால் நச்சுவாயுக் கசிவுத் தீர்ப்பில் மறுஆய்வு இல்லை என உச்சநீதிமன்றம் முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 12, 2011

1984 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த போப்பால் நச்சு வாயுக்கசிவு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தின் அளவைத் தளர்த்தி, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.


உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட நிலையில், இவ்வளவு காலதாமதமாக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கான காரணம் என்ன என்பதை இந்திய மத்தியப் புலனாய்வுத்துறையும், மத்தியப் பிரதேச அரசும் தெளிவுபடுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு நேற்றுத் தீ்ர்ப்பளித்துள்ளது.


1996-ம் ஆண்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச். அகமதி தலைமையிலான இரு நீதிபதிகள் குழு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 10 ஆண்டு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டது.


1984ம் ஆண்டு போப்பால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய நச்சுவாயுவால் 3,500 பேர் வரையில் உடனடியாகவும், 15,000 பேர் வரையில் அதன் தாக்கத்தினால் பின்னரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சன், மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்போடு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டார். போப்பால் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் தலைவர் கேசுப் மகிந்திரா மற்றும் 6 பேருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதி்த்துத் தீர்ப்பளித்தார்.


அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான உயிரிழக்கக் காரணமானவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் தண்டனை என்பது மிக மென்மையான தண்டனை என பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புக்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், சிபிஐ மற்றும் மத்தியப் பிரதேச அரசு, உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தன.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]