உள்ளடக்கத்துக்குச் செல்

போர் நிறுத்தத்தை அடுத்து குர்தியப் போராளிகள் துருக்கியில் இருந்து ஈராக் நோக்கி நகர்வு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 8, 2013

போர்நிறுத்த உடன்பாடு ஒன்றை அடுத்து அடுத்து குர்தியப் போராளிகள் தென்கிழக்குத் துருக்கியில் உள்ள தமது இருப்பிடங்களை விட்டு ஈராக் நோக்கி நகர்ந்துள்ளதாக குர்திய வட்டாரங்கள் அறிவித்துள்ளன.


குர்திய மக்கள் வாழும் பகுதி
குர்திய மக்கள் வாழும் பகுதி

பிகேகே என அழைக்கப்படும் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியினர் தமது படையினரின் கட்டம் கட்டமான விலகலை மே மாதத்தில் ஆரம்பிக்கப்போவதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தனர். "அவர்கள் விலக ஆரம்பித்து விட்டனர் என்பது எமக்குத் தெரியும்," என அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்ட குர்திய அரசியல்வாதி செலகாட்டின் தெமீர்த்தசு தெரிவித்தார்.


பிகேகே தனது போராளிகள் இரண்டாயிரம் பேரை துருக்கியில் வைத்துள்ளது. இவர்களின் முழு விலகலும் முடிய ஏறத்தாழ நான்கு மாதங்கள் வரை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கால்நடையாகவே ஈராக்கின் காண்டில் மலைகளில் உள்ள தமது தளங்களுக்குத் திரும்புவர்.


துருக்கியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பிகேகே தலைவர் அப்துல்லா ஒக்கலான் தமது படைகளை துருக்கியை விலகுமாறு மார்ச் மாதத்தில் உத்தரவிட்டிருந்தார்.


1999 ஆண்டில் இவ்வாறான படை விலகலின் போது துருக்கியப் படையினர் போராளிகள் மீது தாக்கியதில் சுமார் 500 போராளிகள் வரை உயிரிழந்தனர். ஆனால், இம்முறை இராணுவத்தினர் தாக்குதலை நடத்த மாட்டார்கள் என துருக்கியப் பிரதமர் ரெக்கெப் தாயிப் எர்தோகான் உறுதியளித்துள்ளார்.


துருக்கிக்கு எதிரான 30 ஆண்டு காலப் போரில் 40,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


மூலம்

[தொகு]