உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து, 158 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 22, 2010

இந்தியாவின் தெற்கு மாநிலமான கர்நாடகத்தின் மங்களூர் நகரில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் 158 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.


கருநாடக மாநிலத்தில் மங்களூரின் அமைவிடம்
விபத்திற்குள்ளான விமானத்தை ஒத்த ஏர் இந்தியாவின போயிங் விமானம்

துபாயில் இருந்து மங்களூர் நோக்கி வந்த போயிங் 737 ரக ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812 விமானத்தில் 21 குழந்தைகள் உட்பட 160 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்ததாக நம்பப்படுகிறது. எட்டு பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 06:00 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இவ்விமான நிலையத்தின் ஓடு தளத்தில் விமானம் தரையிறங்க முற்பட்ட போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு சற்று முன்னர் டயர் வெடிப்பது போல சத்தம் கேட்டதாக உயிர் தப்பிய உமர் பாரூக் என்பவர் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்தார்.


இவ்விமானத்தில் பயணம் செய்தோர்ரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார் . இவர்கள் மத்திய கிழக்கில் பணியாற்றிவிட்டு குடும்பத்தினருடன் திரும்பியவர்கள் என பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். பல குழந்தைகள் இதில் பயணித்திருந்தனர்.


விபத்து நடந்த போது இலேசான மழை தூறிக்கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது.


மலை ஒன்றின் உச்சியில் அமைந்துள்ள மங்களூர் விமான நிலையத்தின் ஓடு பாதையின் முடிவில் ஒரு பள்ளத்தாக்கு ஒன்றும் காணப்படுகிறது. இது விமானிகளுக்கு ஒரு கடும் சோதனையான ஓடு பாதை எனச் சொல்லப்படுகிறது.


”விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. இதனால் உயிர் தப்பியவர்களைக் கண்டுபிடிக்கும் பணி மிகவும் சிரமமாக உள்ளது,” என மங்களூர் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


”விபத்து நடந்த இடத்தில் தற்போது உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயுள்ளன.” என ஏர் இந்தியாவின் மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஐந்தாண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஜூலையில் பட்னா நகரில் விமான விபத்து இடம்பெற்றது. அப்போது 50 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம்[தொகு]