உள்ளடக்கத்துக்குச் செல்

மடகஸ்காரின் நாடு கடந்து வாழும் முன்னாள் தலைவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 29, 2010

எதிர்க்கட்சி ஆதரவாளர்களைச் சுட்டுக் கொல்வதற்கு ஆணையிட்ட குற்றத்திற்காக நாடு கடந்த நிலையில் வாழும் மடகஸ்காரின் முன்னாள் அரசுத்தலைவர் மார்க் ரவலோமனானாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள்காலக் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


முன்னாள் அதிபர் மார்க் ரவலொமனானா

2009 ஆண்டு பெப்ரவரி மாதம் மார்க் ரவலோமனானாவின் அரசுத் தலைவர் மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் 30 பேர் அவரின் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தற்போதைய அரசுத்தலைவர் ஆண்ட்ரி ராசொய்லினாவின் ஆதரவாளர்கள் ஆவர். சென்ற ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் இராணுவத்தினரின் உதவியுடன் ராசொய்லினா ஆட்சியைக் கைப்பற்றினார்.


ரவலோமனானா 2009 மார்ச் மாதத்தில் இருந்து நாடு கடந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.


கொலைக்குற்றம் , மற்றுக் உடந்தையாக இருந்தமை போன்ற குற்றங்கள் இவர் மீதும் மேலும் 18 பேர் மீதும் சுமத்தப்பட்டிருந்தன. குற்றம் சுமத்தப்பட்டோரில் பெரும்பாலானோர் இப்போது நாட்டில் இல்லை.


நீதிமன்றம் அதிபர் ராசொய்லினாவின் அதிகாரத்தில் இருப்பதால் தமக்கு நீதி கிடைக்காது எனக் கூறி ரவலோமனானாவின் வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணை தொடங்கியவுடன் நீதிமன்ரத்தை விட்டு வெளியேறினர். "அவருக்கு எதிராகத் தீர்ப்பளிப்பதே இந்நீதிமன்றத்தின் நோக்கம். எனவே அவரால் இந்நாடுக்கு மீண்டும் திரும்பி வர முடியாது, எதிர்வரும் தேர்தல்களிலும் பங்குபற்ற முடியாது," என வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறினார்.


கடந்த 19 ஆண்டுகளாக மடகஸ்காரில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

மூலம்

[தொகு]