உள்ளடக்கத்துக்குச் செல்

மதுவின் மீதான முழுமையானத் தடைக்காகப் பணியாற்றுவேன்: வைகோ பேச்சு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 5, 2013

தமிழகத்தில் மதுவின் மீது முழுத் தடையைக் கொண்டுவரும் வகையில் பரப்புரைகளைச் செய்யவிருப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று சென்னையில் தெரிவித்தார். கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட குற்றங்களைச் செய்த குற்றவாளிகளில் பெரும்பாலானோர் மதுவின் தாக்கத்தினாலேயே அவ்விதம் நடந்துகொண்டதாக வைகோ கருத்து தெரிவித்தார்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் 21 ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, மதுவுக்கு எதிரான தனது பரப்புரை, அரசியல் ஆதாயம் கருதி நடத்தப்படுவதன்று எனப் பேசினார். மாநிலத்தில் மதுவின் மீதான முழுமையானத் தடை நடைமுறைக்கு வரும்வரை தான் ஓயப் போவதில்லை எனப் பேசிய அவர், புதுடில்லியில் சமீபத்தில் நடந்த கொடூர கற்பழிப்புக் குற்றத்தைச் செய்தவர்கள் குற்றத்திற்கு முன்னதாக 'மது' அருந்தியிருந்தனர் என்றார்.


கூட்டத்தில் தொடர்ந்து பேசிய வைகோ, "மது அருந்தும் தீயப் பழக்கம் ஏராளமான குடும்பங்களைச் சிதைத்து வருகிறது. இளைஞர்களின் மது அருந்தும் பழக்கம், குடும்பத்தையும் சமூகத்தையும் நிலைகுலைய வைக்கிறது. எப்பாடுபட்டாவது நாம் இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும். பெரியார், காமராசர், ராஜாஜி போன்ற தலைவர்கள் மதுவின் மீதான தடைக்குக் குரல் கொடுத்தார்கள். குற்றங்கள் பெருகுவதற்கு 'மது அருந்துதல்' ஒரு நேரடிக் காரணம் என்பது எனது கருத்து" என்றார்.


மூலம்

[தொகு]