மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்

விக்கிசெய்தி இலிருந்து
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

ஞாயிறு, சனவரி 12, 2014

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு அரசுத்தலைவர் மிக்கேல் ஜொட்டோடியா கடந்த வெள்ளி அன்று பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதை அடுத்து அவர் பெனின் நாட்டுக்குச் சென்றார். அங்கேயே அவர் நாடு கடந்த நிலையில் வாழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெனின் வந்திறங்கிய ஜொட்டோடியாவை பெனின் வெளியுறவுத்துறை அமைச்சர் நசீரோ அரிபாரி விமான நிலையத்தில் சந்தித்தார்.


கடந்த மாதம் கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களிக்கும் இடையில் ஆரம்பமான இன வன்முறைகளில் குறைந்தது ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர்.


ஜொட்டோடியா, மற்றும் பிரதமர் நிக்கொலாசு தியெங்காயி ஆகியோரின் பதவி விலகல் தலைநகர் பாங்கூயியில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இரு தரப்புகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்று வருவதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. குறைந்தது ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளனர். முஸ்லிம்களின் வீடுகள், மற்றும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.


மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் முதல் முஸ்லிம் இன அரசுத்தலைவர் மிக்கேல் ஜொட்டோடியா கடந்த ஆண்டு அரசுத்தலைவர் பதவியைக் கைப்பற்றினார். அவர் பதவியைக் கைப்பற்ற உதவிய செலெக்கா போராளிகள் அமைப்பை அவர் கலைத்திருந்தாலும், போராளிகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.


இதனால் கிறித்தவர்கள் தமக்கிடையே கண்காணிப்புக் குழுக்களை அமைத்து பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.


ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 4,000 அமைதிப் படையினர் நாட்டில் நிலை கொண்டுள்ளனர். அத்துடன் 1,600 பிரெஞ்சுப் படையினரும் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதற்கிடையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரை நாட்டில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை பன்னாட்டு அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளது.


மூலம்[தொகு]