மருத்துவத்துக்கான 2011 நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 4, 2011

உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பற்றிய ஆய்வுக்காக மூன்று அறிவியலாளர்களுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் புரூஸ் பட்லர், பிரெஞ்சு அறிவியலாளர் ஜூல்ஸ் ஹொஃப்மன், கனடாவின் ரால்ஃப் ஸ்டெயின்மன் ஆகியோருக்கே விருது வழங்கப்படுகிறது. இவர்களில் ரால்ஃப் ஸ்டெயின்மன் கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 30 ஆம் நாள் புற்றுநோய் காரணமாக தனது 68வது அகவையில் இறந்து விட்டார். அவர் இறந்தது தெரியாமல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இறந்தவர் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. இது குறித்து ஆராய்ந்த நோபல் பரிசுக் குழு, கொடுத்த விருதை திரும்ப வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளது.


"நோபல் பரிசு விதிமுறைகளின் படி, இறந்த ஒருவர் அவர் இறப்புக்கு முன்னரான ஆக்கத்திற்கு பரிசு வழங்க முடியாது. ஆனாலும், ஒருவருக்குப் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்திருந்தால், அப்பரிரை அவருக்கு வழங்க முடியும்." இதன் படி ஸ்டெயின்மனுக்குப் பரிசு வழங்க முடியும் என்ற முடிவுக்கு நோபல் பரிசுக் குழு வந்துள்ளது. "நல்லெண்ணத்தின் அடிப்படையில், அவர் உயிரோடு உள்ளார் என்ற நம்பிக்கையிலேயே பரிசு அறிவிக்கப்பட்டது," என பரிசுக் குழு தெரிவித்துள்ளது.


புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது என்பதை ரால்ஃப் ஸ்டெயின்மன் கண்டறிந்தார். ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பட்லரும் ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர்.


மூலம்[தொகு]