உள்ளடக்கத்துக்குச் செல்

மருந்து கொடுத்து உண்மை அறியும் சோதனை இந்தியாவில் தடை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 6, 2010


இந்தியாவில் காவல்துறையினர் குற்றச் சந்தேக நபர்களை விசாரிக்கும்போது உண்மையை வெளிக்கொணர மருந்துகளை அவர்களின் உடலில் பலவந்தமாக ஏற்றி விசாரிப்பதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.


இப்படியான வேதியியல் பொருட்களை பயன்படுத்துதல், மூளைச் செயற்பாட்டை கண்காணித்தல், உண்மை கண்டறியும் கருவியைப் பயன்படுத்துதல் போன்றவை தனி மனித சுதந்திரங்களை மீறுவதால் இவை சட்ட விரோதமானவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


விசாரணை அமைப்புக்களுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


அதே நேரம், சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து அந்த சோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை மேலதிக விசாரணைக்கு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அந்தத் தகவல்களை ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவிததுள்ளனர்.


பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சாதாரண முறையில் விசாரணை நடத்தும்போது, அவர்கள் உண்மையான தகவல்களைச் சொல்லாத நிலையில், மாற்று வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.


இது போன்ற சோதனைகளுக்கு உட்படுமாறு எந்த ஒரு தனிநபரையும் வற்புறுத்த முடியாது. அவ்வாறு வற்புறத்துவது தனிநபரின் சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவதாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது.


குற்றம் சாட்டப்பட்டவரையோ, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படுவோரையோ அல்லது சாட்சியம் அளிப்பவரையோ அதுபோன்ற சோதனைகளுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதை, அரசியல் சட்டப் பிரிவு 20 உட்பிரிவு மூன்றை மீறுவதாகும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பல குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


சோதனையின் போது சோடியம் பென்தனோல் ஊசி மூலம் குற்றவாளியின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இம்மருந்து தன்னிலை மறக்கச் செய்து உண்மைகளை வெளிக்கொணர வைக்கிறது.


சென்ற ஆண்டு மாவோயிசத் தலைவர் கொபாத் காந்தி கைது செய்யப்பட்டபோது அவருக்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. அத்துடன், தில்லியில் 17 இளம் பெண்கள், மற்றும் குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு இந்த மருந்து ஏற்றப்பட்டது.

மூலம்[தொகு]