உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியக் கிறித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டது அல்-இசுலாம் சஞ்சிகை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 7, 2010


கடந்த ஆண்டு மே மாதம் வெளியான கிறித்தவர்கள் சம்பந்தமான ஒரு ஆய்வுக்கட்டுரை குறித்து மலேசியாவின் அல்-இசுலாம் என்ற சஞ்சிகை கத்தோலிக்கத் தேவாலயத்திடமும் கிறித்தவ மக்களிடமும் பகிரங்கமான மன்னிப்பு கேட்டிருக்கிறது. அந்த பத்திரிகையின் வெளியீட்டாளர், தன்னுடைய இணையத்தளத்தில் அந்த மன்னிப்பு கோரிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.


அல்-இசுலாம் சஞ்சிகை ஓர் ஆய்வுக்கட்டுரையை படைத்திருந்தது. மலேசியாவில் முஸ்லிம்கள் முறைகேடாக கிறித்தவ மதத்துக்கு மாறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக அதன் செய்தியாளர்கள் ரோமன் கத்தோலிக்கர்கள் போல வேடமிட்டு தேவாலயத்துக்கு சென்று புனித அப்பம் பெற்று கொண்டனர். புனித அப்பத்தை வாங்கி அதை வாயில் இருந்து துப்பியதாக வெளியிடப்பட்ட செய்தி கிறித்ததுவர்களின் மனதை புண்படுத்துவதற்காக அல்ல என அல் இஸ்லாம் என்ற அந்த பதிப்பகம் தெரிவித்துள்ளது.


அந்த கட்டுரை கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அதிருப்தி அலைகள் எழுந்தன. அதன் தொடர்பாகவே அந்தப் பத்திரிகை இந்த மன்னிப்பை கேட்டுக் கொண்டிருக்கிறது.


சமயத்தைக் கைவிட்டு செல்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சம்பந்தமான கருத்துக்களை வெளியிடுவதுதான் அந்தக் கட்டுரையின் நோக்கமே தவிர கிறித்தவர்களையோ கிறித்தவ சமயத்தையோ இழிவுபடுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. மேலும் வழிபாட்டுத் தலத்தின் தூய்மைக்கும் மேன்மைக்கும் மாசு கற்பிக்கும் நோக்கம் துளியும் கிடையாது, என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.


முறைகேடான மதமாற்றம் குறித்து எவ்விதத் தடயங்களையும் தாம் பெறவில்லை என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியாளர்கள் மீதான விசாரணை கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கிறித்தவர்கள் புகார் செய்ய ஆரம்பித்துள்ளனர்.


பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் வசிக்கும் மலேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கடந்த சில மாத காலமாக இங்கு மத தொடர்பான சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றன.


மலே மக்கள் கட்டாயம் இசுலாம் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என மலேசியச் சட்டம் சொல்கிறது. ஆனாலும் அங்கு மலே இல்லாத சிறுபான்மையின சீன, மற்றும் இந்தியர் ஏனைய மதங்களைப் பின்பற்றுவதற்கு மலேசியச் சட்டம் இடம் கொடுக்கிறது.

மூலம்

[தொகு]