மலேசியப் பாடநூலில் இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 13, 2011

மலேசியாவில் தேசிய விருது பெற்ற எழுத்தாளரால் மாணவர்களுக்காக எழுதப்பட்டு இந்த ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'இண்டர்லொக்" என்ற இலக்கியப் பாடநூல் ஒன்றில் உள்ள புதினம் மலேசியத் தமிழரிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இது குறித்து கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.


அப்புதினத்தில் காணப்படும் சில சொற்களும் உள்நோக்கங்களைக் கொண்ட வாசகங்களும் இந்தியர்களுக்கு சினத்தை மூட்டியுள்ளன. பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "இப்பிரச்சினை குறித்து அரசாங்கம் என்ன செய்யப் போகிறது," என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு வினவினார். "அரசாங்கம் மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு மதத்தினரையும் அவர்களது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். ஏதேனும் தவறு நடந்து விட்டால், அதற்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் என்றும் தயார் நிலையில் இருக்க வேண்டும்”, என்றார் சந்தியாகு.


2011-ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்புக்கான மலாய்மொழி இலக்கியப்பாட நூல்கள் மாற்றப்பட்டுள்ளன. “இண்டர்லொக்” என்னும் நூல் மலாய் இலக்கியப் பாடத்திற்குரிய நூலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதற்கொண்டு மலாய் இலக்கியப்பாட மாணவர்கள் இந்நூலைப் படித்து ஆய்வு செய்வர். மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) என்னும் குறுநாவல் ஒன்று இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இப்புதினம் அப்துல்லா உசேன் என்ற தேசிய எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புதினம் மலேசியத் தமிழர்களின் வாழ்வியலை இடித்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.


அப்புதினத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய பகுதிகள் வருமாறு:


"மலையாளிகளும் தெலுங்கர்களும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவாகும். இவர்கள் அனவரும் இயல்பாகப் பழகுவதற்குரிய காரணம்; இவர்கள் எல்லாரும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களாகும்." "யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை.", "ஆடுகளைப்போல முண்டியடித்தனர்."


இண்டர்லொக் புதினத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து ஆய்வு நடத்தி கல்வி அமைச்சிடம் பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக ம.இ.கா தலைவர் ஜி.பழனிவேல் தெரிவித்தார். மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.சிங்காரவடிவேலு, தற்போதைய தலைவர் டாக்டர் எஸ்.குமரன், மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவர் ஆர்.எஸ். மோகன் சாண், மலாயா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து, கல்வி அமைச்சின் முன்னாள் அதிகாரி கிருஷ்ணபகவான் ஆகியோர் இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்று உள்ளனர்


இண்டர்லொக் புதினத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிய அமைப்பு குறித்த பகுதிகள் புதினத்தில் தரப்பட்டுள்ள காலப்பகுதியைப் பிரதிபலிக்கின்றது என்றும் அது எந்த ஒரு சமூகத்தையும் இழிவு படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருக்கவில்லை எனவும் சீனாவின் பெய்ஜிங் வெளிநாட்டுப்படிப்புகளுக்கான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவாங் சரியான் தெரிவித்தார்.


மூலம்