மலேசியா: மொங்கோலிய அழகி அல்தான்தூயா கொலைவழக்கில் எதிரிகள் இருவரும் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 23, 2013

மலேசியாவின் பல உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் மொங்கோலிய அழகி அல்தான்தூயா சாரிபூவின் படுகொலை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் மலேசிய மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.


அல்தான்தூயா (27) என்ற மொங்கோலிய மாடல் அழகி 2006 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல், இராணுவம் பயன்படுத்தும் சி-4 ரக வெடிமருந்துகளால் வெடி வைத்துச் சிதறல் செய்யப்பட்ட பின்னர், ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக மலேசியப் பிரபலங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் காவல்துறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் இன்ஸ்பெக்டர் அசிலா அட்ரி, முன்னாள் காபரல் சிருள் அசார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 2009 ஆம் ஆண்டில் இவர்களுக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.


குற்றவாளிகள் மீது எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குற்றத்தை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்களை முன்வைக்காததால் அவ்விருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.


இவ்வழக்கில் அப்போதைய துணைப்பிரதமரும், இப்போதைய பிரதமருமான நஜீப் துன் ரசாக்கின் பெயரும் தொடர்பு படுத்தப்பட்டது. பிரதமரின் முன்னாள் சகா ஒருவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மலேசிய எதிர்க் கட்சிகள் நஜீபை இவ்வழக்கில் சம்பந்தப் படுத்திய போதும், அவர் அதனை மறுத்து வந்துள்ளார். அல்தான்தூயாவுடன் தாம் தொடர்பு வைத்திருக்கவில்லை என அவர் மறுத்துள்ளார்.


அரசுத்தரப்பு இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளது.


மூலம்[தொகு]