உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய இடைத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 28, 2010


மலேசியாவில் உலுசிலாங்கூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளரும், ஆளும் தேசிய முனன்ணி வேட்பாளருமான கமலநாதன் வெற்றி பெற்றுள்ளார்.


இவரை எதிர்த்து மக்கள் கூட்டணி கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் சையிட் இப்ராகிம் போட்டியிட்டார். இவர் தேசிய முன்னணியில் மூத்த தலைவராக விளங்கியவர். சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். ஞாயிற்றுக்கிழமை இரவு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. கமலநாதனுக்குக் கிடைத்த வாக்குகள் 24,997. சைட் இப்ராஹிமிற்குக் கிடைத்த வாக்குகள் 23,272. கமலநாதன் 1,725 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார்.


மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) உள்ளிட்ட பல்வேறு கட்சி களின் கூட்டணியான தேசிய முன்னணி, தற்போது ஆட்சி செய்து வருகிறது.


கடந்த 2008 இல் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றினாலும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்தக் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. மலேசிய இந்திய காங்கிரஸ் செல்வாக்குப் பெற்ற உலுசிலாங்கூரில் கடந்த தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி தோல்வியைத் தழுவியது.


மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜைனல் அபிடின் சமீபத்தில் காலமானதைத் தொடர்ந்து அங்கி இடைத்தேர்தல் நடந்தது.


உலு சிலாங்கூர் இடைத் தேர்தல் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பொருளியல் சீர்திருத்தங்களுக்கான மக்கள் வாக்கெடுப்பாகப் பார்க்கப்பட்டது. முந்திய தேர்தலில் எதிர்க்கட்சியிடம் இழந்த உலுசிலாங்கூர் தொகுதியை மீண்டும் கைப்பற்ற ஆளும் தேசிய முன்னணி கடந்த பல நாட்களாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது குறித்து மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த வெற்றி மூலம் விரைவுபடுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.


இதுவரை நாடாளுமன்றத்தில் ம.இ.கா. உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாக இருந்தது. கமலநாதனின் வெற்றி அதை நான்காக அதிகரித்திருக்கிறது.


சீனர்களின் வாக்கு 2008 பொதுத்தேர்தலைப் போலவே இந்த இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சிக்குப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது என நோக்கர்கள் கருதுகின்றனர்.

மூலம்

[தொகு]