மாபெரும் எரிமலைப் பாறைகள் நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 11, 2012

பசிபிக் பெருங்கடலில் 10,000 சதுர மைல் (26,000 சதுர கிமீ) பரப்பளவைக் கொண்ட பரந்த எரிமலைப் பாறைகளை நியூசிலாந்து இராணுவ விமானம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.


நியூசிலாந்துக் கரையில் இருந்து 1,000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஒரு கடற்படை கப்பல் மிதப்புப் பாறைகளைக் கொண்ட திரளைத் தவிர்க்கும் பொருட்டு தனது வழியை கட்டாயமாக மாற்ற வேண்டியிருந்தது. இந்த அசாதாரண நிகழ்வு அநேகமாக ஒரு நீருக்கடியில் உள்ள எரிமலையிலிருந்து வெளியிடப்பட்ட நுரைக்கல்லாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


லெப். டிம் ஆஸ்கார் என்ற கடற்படை அதிகாரி ஒருவர் இந்த நிகழ்வு "விநோதமானது" எனத் தெரிவித்தார்.


இந்த நுரைக்கல்லின் மூலம் நியூசிலாந்தின் வடக்கே உள்ள மொனோவாய் என அழைக்கப்படும் கடலுக்கடியில் உள்ள எரிமலைப் பாறையில் இருந்து உருவாகியிருக்கலாம் என அக்கப்பலில் சென்ற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கடல்மலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குழம்பு கடல்நீருடன் கலக்கும் போது, அது நீரை விட அடர்த்தி குறைவானதால் விரைவாக மேற்பரப்புக்கு நுரைக்கல்லாக வெளியேறுகிறது எனக் கூறப்படுகிறது.


மூலம்[தொகு]