மாயா ஊழியை நம்பும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்சிக்கோவில் கூடினர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 21, 2012

உலகத்தின் இறுதி நாள் இன்று என நம்புவோர் பல்லாயிரக்கணக்கானோர் நடு அமெரிக்கா மற்றும் பல இடங்களில் பண்டைய சிதையல்கள் உள்ள இடங்களில் கூடினர்.


இன்றைய நாள் - 21 திசம்பர் 2012 - மாயா நாகரிக காலத்தின் நாட்காட்டியின் கடைசி நாளாகும். இந்நாளில் உலகம் அழியப்போகிறது என்று வதந்தி பரப்பிய நூற்றுக்கணக்கான கிறித்தவர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டனர்.


மெக்சிக்கோவின் மெரிடா நகர், தெற்கு பிரான்சின் புகாராக் மலைப்பகுதி, துருக்கியின் சிரின்சு நகரம், செர்பியாவின் ருந்தாஜ் மலை போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். மாயா ஊழியை நம்புவோரை விட செய்தியாளரகளே இவ்விடங்களில் அதிகமாகக் கூடியுள்ளனர் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


"உலகம் அழியும் என்பதை நான் நம்பவில்லை, ஆனாலும் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன்," என செர்பியர் ஒருவர் செய்தியாளரிடம் கூறினார்.


மாயா நாட்காட்டியின் புதிய வாசிப்புகள் அந்நாட்காட்டி உலகின் ஊழியை முன்கணிப்புச் செய்யவில்லை என வல்லுனர்கள் சென்ற ஆண்டு அறிவித்திருந்தனர். உண்மையில் மாயா நாட்காட்டியில் இந்நாள் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் எனப் பலர் நம்புகின்றனர்.


மாயா நாகரிகம் பண்டைக்கால நடு அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஒண்டுராசு போன்ற நாடுகள் விரவியிருக்கும் நடு அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. எசுப்பானியரின் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் உள்ளனர்.


மூலம்[தொகு]