மாலியின் திம்பக்து நகர மசூதிக் கல்லறைகள் இசுலாமியப் போராளிகளால் தகர்ப்பு
- 14 திசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகளின் தாக்குதலில் இரண்டு அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர்
- 2 திசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகள் போர் நிறுத்தத்தை முடித்துக் கொண்டனர்
- 3 நவம்பர் 2013: மாலியில் இரண்டு பிரெஞ்சு செய்தியாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்
- 27 செப்டெம்பர் 2013: மாலியின் துவாரெக் போராளிகள் அமைதிப் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
- 19 சூன் 2013: துவாரெக் போராளிக் குழுவுடன் மாலி அரசு அமைதி உடன்பாடு
புதன், சூலை 11, 2012
மாலியின் வடக்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திம்பக்து நகரத்தில் உள்ள மிகப் பிரபலமான 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்காரெய்பர் பள்ளிவாசலில் அமைந்துள்ள இரண்டு கல்லறைகளை இசுலாமியத் தீவிரவாதிகள் தகர்த்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கல்லறைகளைத் தகர்க்கும் முன்பு போராளிகள் ஆகாயத்தில் சுட்டு அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
திம்பக்து நகரம் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் பல நூற்றாண்டுகள் பழமையான சூபிய முஸ்லிம் மதக்குருக்களின் கல்லறைகள் உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்நகரை மாலி அரசுப் படைகளிடம் இருந்து கைப்பற்றிய அல்-கைதா இயக்கத்துடன் தொடர்புடைய அன்சார் தைன் என்ற இசுலாமியப் போராளிக் குழுவினர் இவ்வாறான உருவ வழிபாடு இசுலாமியக் கொள்கைக்கு முரணானது எனக் கூறி வருகின்றனர்.
சென்ற வாரம் இங்குள்ள சில மதத்தலங்கள் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இவ்வாறான செய்கைகள் போர்க்குற்றம் என அது எச்சரித்துள்ளது. இதனால் இவ்வாறான அழிப்புகள் ஹேக் நகரில் உள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அன்சார் தன் குழுவினரின் இவ்வாறான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும் படி யுனெஸ்கோவும், மாலி அரசும் போராளிகளைக் கேட்டுள்ளன. இதுவரையில் இந்நகரில் உள்ள 16 கல்லறைகள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. நகரில் உள்ள அனைத்துக் கல்லறைகளையும் அழித்து விடப்போவதாக போராளிகள் எச்சரித்துள்ளனர்.
ஆரம்பத்தில் துவாரெக் போராளிகளுடன் இணைந்தே அன்சார்-தைன் குழுவினர் போரிட்டு மாலியின் வடக்கைத் தம்வசப்படுத்தியிருந்தனர். ஆனாலும், பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து இசுலாமியப் போராளிகள் திம்பக்து, காவோ, மற்றும் கிடால் நகர்களைக் கைப்பற்றினர்.
15ம், 16ம் நூற்றாண்டுகளில் திம்பக்து நகரம் பாரம்பரிய இசுலாமியக் கலாசார, மற்றும் கல்வி மையமாகத் திகழ்ந்துள்ளது. இந்நகரம் 333 மதக்குருக்களின் நகரம் எனவும் அழைக்கப்படுகிறது.
மூலம்
[தொகு]- Tombs in Timbuktu's Djingareyber mosque 'destroyed', பிபிசி, சூலை 10, 2012
- Ansar Dine destroy more shrines in Mali, அல்ஜசீரா, சூலை 10, 2012