மாலியின் துவாரெக், இசுலாமியப் போராளிகள் இணைந்து அசவாத் பகுதியை இசுலாமிய நாடாக அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 27, 2012

இரு மாதங்களுக்கு முன்னர் மாலியின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றிய இரண்டு போராளிகள் குழுக்கள் இணைந்து தமது பிராந்தியத்தை இசுலாமிய நாடாக்க முடிவு செய்துள்ளன.


போராளிகள் வசமுள்ள மாலியின் அசவாத் பகுதி

துவாரெக் போராளிக் குழு அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் (MNLA, மற்றும் இசுலாமியத் தீவிரவாதக் குழு அன்சார் டைன் ஆகிய குழுக்கள் காவோ நகரில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அல்-கைதாவுடன் தொடர்புள்ள அன்சார் டைன் குழு ஏற்கனவே சரியா சட்டத்தை சில நகரங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.


"உடன்பாடு எட்டப்பட்டது உண்மை," எனக் கூறிய எம்என்எல்ஏ தளபதி கேர்ணல் பூனா அக் அத்தாயூப், "அசவாத் இசுலாமியக் குடியரசு இப்போது ஒரு தனியான சுதந்திர நாடு," எனக் கூறினார். உடன்பாடு எட்டப்பட்டதும் காவோ, மற்றும் திம்பக்து நகர்களில் இது துப்பாக்கி வேட்டுகள் மூலம் கொண்டாடப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.


மார்ச் மாதத்தில் மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தமக்கு சாதகமாக்கிய இப்போராளிக் குழுக்கள் மாலியின் வடக்குப் பகுதியை இராணுவத்திடம் இருந்து முழுமையாகக் கைப்பற்றித் தனிநாடாக அறிவித்தனர். இதனையடுத்து 300,000 இற்கும் அதிகமானோர் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறினர்.


காப்டன் அமடூ சனோகோ மாலியின் ஆட்சியைப் புரட்சி மூலம் கைப்பற்றினார். பின்னர் வெளிநாட்டுப் பொருளாதாரத் தடை மற்றும் அழுத்தம் காரணமாக அவர் ஆட்சியை மீண்டும் நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்தார். ஆனாலும் அரசின் பின்புலத்தில் செல்வாக்கு மிக்கவராக உள்ளார் என அவதானிகள் கருதுகின்றனர்.


வடக்குப் பகுதியை மாலி மீளவும் கைப்பற்றுவதற்கு உதவியாகத் தாம் 3,000 படையினரை மாலிக்கு அனுப்பவிருப்பதாக பிராந்திய அமைப்பான எக்கோவாஸ் அறிவித்திருந்தது. ஆனாலும் இதற்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லை.


புரட்சிக்கு ஆதரவானவர்களால் கடந்த வாரம் மே 21 இல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் மாலியின் இடைக்காலத் தலைவர் டியோன்குண்டா டிராவோர் படுகாயமடைந்த நிலையில் தற்போது பிரான்சில் சிகிச்சை பெற்று வருகிறார்.


மூலம்[தொகு]