மாலி மீது மேற்காப்பிரிக்க நாடுகள் பொருளாதாரத் தடை விதிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 3, 2012

மேற்காப்பிரிக்க நாடுகள் மாலி மீது உடனடியாக அமுலுக்கு வருமாறு பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளதாக ஐவரி கோஸ்ட் அரசுத்தலைவர் கூறியுள்ளார்.


மாலியுடனான அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், அதன் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் எக்கோவாஸ் என்ற மேற்காப்பிரிக்க நாடுகள் அமைப்பின் தற்போதைய தலைவரும் ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவருமான அலசான் வட்டாரா தெரிவித்துள்ளார்.


மாலியின் இராணுவ ஆட்சியாளரை நேற்று திங்கட்கிழமைக்கு முன்னர் பதவி விலகும் படி எக்கோவாஸ் அமைப்பு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. எக்கோவாசின் பொருளாதாரத் தடையைத் தாம் கருத்தில் கொண்டுள்ளதாக மாலியின் இராணுவப் புரட்சிக்குத் தலைமை வகித்த கப்டன் அமடீ சனோகோ தெரிவித்துள்ளார். மாலியின் பொருளாதாரம் முக்கியமாக தனது அயல்நாடுகளான எக்கோவாஸ் அமைப்பிலேயே தங்கியுள்ளது. மாலி உட்பட ஏழு நாடுகள் ஒரே நாணய அலகைக் கொண்டுள்ளன. இதனால் எக்கோவாசின் பொருளாதாரத் தடை மாலியைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில் மாலியின் இராணுவப் புரட்சியைத் துவாரெக் போராளிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். துவாரெக் போராளிகள் நாட்டின் வடக்குப் பகுதி முழுவதையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். வடக்குப் பகுதியின் முக்கிய நகரங்களான கிடால், திம்பக்டு, காவோ ஆகியவற்றைக் கடந்த சில நாட்களில் அவர்கள் இராணுவத்தினரிடம் இருந்து மீட்டுள்ளனர்.


வடக்கின் போராளிகள் குழு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. ஒரு பிரிவு துவாரெக் மக்களுக்குத் தனிநாடு கேட்கிறது, மற்றையது அல்-கைதாவின் வட-மேற்கு ஆப்பிரிக்கக் கிளையுடன் தொடர்புள்ளது.


மாலியின் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஐநாவின் பாதுகாப்பு அவை கூடுகிறது.


மூலம்[தொகு]