முகமது அலி ஜின்னாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 1947 உரை தம்மிடம் இல்லை என இந்தியா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 8, 2012

பாக்கித்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா 1947-ஆம் ஆண்டில் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையின் ஒலி வடிவம் தம்மிடம் இல்லை என இந்தியாவின் அரசு வானொலியான அனைத்திந்திய வானொலி அறிவித்துள்ளது.


இந்த உரையின் பிரதி ஒன்றை தருமாறு பாக்கித்தானின் அரசு வானொலி இந்திய வானொலியிடம் அதிகாரபூர்வமாகக் கேட்டிருந்தது. பாக்கித்தான் உருவாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் 1947 ஆகத்து 11 ஆம் நாள் சட்டசபையில் ஜின்னா இந்த உரையை ஆற்றியிருந்தார்.


பிரித்தானியாவின் பிபிசி வானொலி தனது ஆவணக் காப்பகத்தில் இவ்வுரை இல்லை என்றும் அதனைத் தருமாறும் பாக்கித்தானிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. "பாக்கித்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடம் குறிப்பிட்ட நாள் ஒன்றில் இடம்பெற்ற உரை குறித்துத் தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்த அனைத்திந்திய வானொலியின் பணிப்பாளர் ஜெனரல் எல்.டி. மந்திலோய், தற்போது அந்த உரையின் பதிவு தம்மிடம் இல்லை எனத் தெரிவித்தார்.


"(ஜின்னாவின்) இந்த உரை, குறிப்பாக நவீன, சனநாயக முறையிலான பாக்கித்தானை உருவாக்க விரும்பும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது," என பாக்கித்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் முர்த்தாசா சோலங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாக்கித்தானின் வானொலி நிலையங்களில் உரைகளைப் பதியும் தொழினுட்பங்கள் அப்போது இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.


இந்த உரையில் ஜின்னா, "நீங்கள் சுதந்திரமானவர்கள்; நீங்கள் கோயில்களுக்குப் போவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது, பாக்கித்தானின் பள்ளிவாயில்களுக்கோ அல்லது வேறு எந்தக் கோயில்களுக்கோ சென்று வழிபட உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் எந்த மதத்தையோ அல்லது இனத்தையோ சார்ந்திருக்கலாம், அது பாக்கித்தான் அரசைச் சார்ந்ததல்ல," எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]