உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது நபியை டுவிட்டரில் விமரிசித்த சவூதி ஊடகவியலாளரை மலேசியா நாடு கடத்தியது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 12, 2012

டுவிட்டரில் முகமது நபியை அவமதித்து எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அம்சா கஷ்காரி என்ற சவூதி அரேபிய ஊடகவியலாளரை மலேசியா நாடு கடத்தியுள்ளது.


கஷ்காரி மீண்டும் சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டதை மலேசியக் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மனித உரிமைக் குழுக்கள் இவரது நாடு கடத்தலை எதிர்த்துக் கருத்து வெளியிட்டிருந்தன.


23 வயதான கஷ்காரி கடந்த வாரம் முகமது நபி குறித்து சில கருத்துகளை தமது டுவிட்டரில் இட்டிருந்தார். நபி பிறந்தநாள் தொடர்பில் அம்சா எழுதியிருந்த டுவிட்டர் கருத்தில், "உன்னைப் பற்றிய பல அம்சங்களை நான் விரும்புகிறேன். அதேநேரம் உன்னைப் பற்றிய சில அம்சங்களை நான் வெறுக்கவும் செய்கிறேன். உன்னைப் பற்றிய பல விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கிறது. நான் உனக்காக பிரார்த்திக்க மாட்டேன்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இதனை அடுத்து 30,000 இற்கும் அதிகமானோர் அவருக்குப் பதில் அனுப்பியிருந்தனர். பல மரண அச்சுறுத்தல்களும் அவருக்கு விடப்பட்டிருந்தன. இதனையடுத்து அவர் அச்செய்தியை நீக்கியிருந்ததுடன், மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு மேலும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதால் உடனடியாக கடந்த வியாழன் அன்று அவர் மலேசியா கிளம்பிச் சென்றார். ஆனாலும் அவர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


கைதிகளைப் பரிமாறும் உடன்படிக்கை எதுவும் மலேசியாவும் சவூதி அரேபியாவும் கொண்டிருக்கவில்லை என்றாலும், இசுலாமிய நாடுகள் என்ற வகையில் இரண்டு நாடுகளும் தமக்கிடையே இணக்க நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.


முகமது நபியை அவமதிக்கும் எவரும் சவூதி அரேபியாவில் சட்டப்படி மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சமயத் துறவுக்கு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், கஷ்காரி அங்கு மரணதண்டனைக்கு உட்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக பன்னாட்டு மன்னிப்பகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.


மூலம்[தொகு]