உள்ளடக்கத்துக்குச் செல்

முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 27, 2012

ஆத்திரேலியாவில் நடைபெறும் இந்தியா, ஆத்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் பொதுநலவாய முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆத்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தியதால் இந்தியா இறுதிப்போட்டி வாய்ப்பினை அனேகமாக இழந்துள்ள அதே நேரத்தில் ஆத்திரேலிய அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.


மொத்தம் 12 முதன்மைப் போட்டிகளைக் கொண்ட முத்தரப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் ஆரம்பத்தில் பின்தங்கி இருந்த இலங்கை திடீர் எழுச்சி அடைந்து 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் ஆத்திரேலியா வெற்றி பெற்றதால் 19 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. பட்டியலில் 10 புள்ளிகளுடன் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. இத்தொடரில் லீக் போட்டிகளில் இலங்கைக்கு மேலும் இரண்டு போட்டிகள் உள்ளன. அவுத்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியிலும் இலங்கை ஆடவுள்ளது.


இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவாக வேண்டுமெனில் நாளைய 11வது போட்டியில் இலங்கைக்கு எதிராக மிகப் பெரும் வெற்றியை ஊக்குவிப்புப் புள்ளியுடன் பெற வேண்டும். ஊக்குவிப்பாக ஒரு புள்ளியைப் பெற தவறினால், இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைக்காது. அதே நேரம் இலங்கை அணி, ஆத்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் (மார்ச் 2) தோல்வி அடையும் பட்சத்தில், அதேவேளையில், இந்தியா ஓட்டவிகிதத்தில் முன்னிலை பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதி வாய்ப்புக் கிடைக்கலாம்.


சச்சின் டெண்டுல்கர் இத்தொடரில் ஆடியுள்ள 6 போட்டிகளில் மொத்தம் 104 ஓட்டங்களை மட்டுமே எடுத்தமை இவரின் ரசிகர்களை ஏமாற்றத்துக்குட்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு, சிட்னி துடுப்பாட்ட அரங்க நிர்வாத்தின் நிரந்தர உறுப்பினர் என்ற விருது வழங்கி கெளரவித்துள்ளது. இதில் துடுப்பாட்ட உலகிற்கு சச்சினின் சாதனைகள், பெருமைகள் குறித்து பாராட்டப்பட்டது. இதற்கான விழாவில் நியூ சவுத் வேல்சு மாநில முதல்வர் பாரி ஓ’ஃபாரல் கலந்து கொண்டு சச்சினுக்கு விருதினை வழங்கி கெளரவித்தார். இதன் மூலம் இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.


மூலம்

[தொகு]