உள்ளடக்கத்துக்குச் செல்

மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை இன்று அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 4, 2010

உலகை உலுக்கிய மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச்சார்ந்த 22 வயதான அஜ்மல் கசாப் குற்றவாளி என விசேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச்சார்ந்த ஹபிஸ் சயீத் மற்றும் ஸகி-யுர்-ரஹ்மான் லக்வி ஆகியோரும் குற்றவாளிகளாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களை குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவித்துள்ளது.


ஒரு வருடம் நடைபெற்ற இந்த வழக்கில் 658 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1,522 பக்கங்கள் கொண்டதாக தீர்ப்பு இருந்தது. கசாபிற்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை கோர இருப்பதாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.


கடந்த 2008, நவம்பர் 26 அன்று, பாகிஸ்தானைச் சார்ந்த பத்துபேர் கொண்ட கும்பல் கடல்வழியே விசைப்படகில் வந்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், நரிமன் பாயின்ட் போன்ற முக்கிய இடங்களை தாக்கியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறைத் தலைவர் கர்கரே, 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர். 60 மணிநேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 9 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர்.


இந்த தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இந்தியா சட்டத்தை மதிக்கும் நாடு, குற்றவாளிக்கும் நேர்மையான நீதி கிடைக்கச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இந்த வழக்கில் முதன்முறையாக அமெரிக்காவைச்சார்ந்த எப்பிஐ இந்திய அரசுக்கு உதவிகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்

[தொகு]