முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 800 இலக்குகளை வீழ்த்தி உலக சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 22, 2010

முத்தையா முரளிதரன்

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையில் காலியில் நடந்த போட்டியில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 800 இலக்குகளை (விக்கெட்) வீழ்த்திய பந்து வீச்சாளர் என்கிற புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.


அவர் இந்த சாதனையை பெறுவதற்காக 800 வது விக்கெட்டாக இந்திய வீரர் பி.பி.ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது அவர் விளையாடுகின்ற 133 வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியாகும். இப்போட்டியில் அவர் மொத்தம் எட்டு இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.


முரளிதரனின் இன்றைய சாதனைக்குப்பிறகு, உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்ன் வீழ்த்திய இலக்குகளை விட, இவர் 92 இலக்குகளை அதிகம் வீழ்த்தியிருக்கிறார்.


கடந்த 18ம் திகதி தொடங்கிய போட்டியின் 2ம் நாள் மழை காரணமாக விளையாட்டு நடைபெறாத போதிலும் 3ம் நாள் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520-8 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.


அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இறுதிநாளான இன்று 338 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததில், இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.


இன்று முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான இந்த துடுப்பாட்டப் போட்டிக்குப் பின்னர், தாம் இனிமேல் தேர்வுத் துடுப்பாட்டங்களில் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று முரளிதரன் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972 இல் கண்டியில் முரளிதரன் பிறந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.


இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.


முரளிதரன் இது வரை 132 தேர்வுப் போட்டிகளை ஆடி உள்ளார். அதே போல் 334 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 512 இலக்குகளை வீழ்த்தி உள்ளார். முரளிதரன் இன்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]