முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக்கிற்கு தமிழகத்தில் மணி மண்டபம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 9, 2012

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தமிழகத்தின் 5 தென்மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தித் தந்த பொறியியலாளர் ஜான் பென்னிகுவிக்கின் நினைவைப் போற்றும் வகையில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ரூ.1 கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.


முல்லைப் பெரியாறு அணை

தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதில் முக்கியபங்களிப்பினை வழங்கியவர் ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் ஆவார். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர்.


கர்னல் பென்னிகுவிக் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற ஆறாக மேற்குப் புறமாக ஓடி அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைப் பார்த்து இதனை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் எனக் கருதி, பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார். அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா அவர்கள் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரித்தானியப் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர்.


இந்தத் திட்டத்தினைத் தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுவிக் அவர்கள் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையை 1895 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். இந்த அணை அக்டோபர் 1895ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினை பெற்று வருகின்றன.


தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும் செலவு செய்த பென்னிகுவிக் அவர்களது நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் அன்னாருக்கு லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் சுமார் 2500 சதுர அடி பரப்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய ஒரு மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுவிக் அவர்களின் பேரன் அழைக்கப்படவுள்ளார். முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இந்த மணிமண்டபம் அமையவுள்ளது.


மூலம்[தொகு]