மெக்சிக்கோவை இரண்டு பெரும் புயல்கள் தாக்கின, ஏராளமானோர் பாதிப்பு
- 11 பெப்பிரவரி 2016: மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு
- 19 செப்டெம்பர் 2013: மெக்சிக்கோவை இரண்டு பெரும் புயல்கள் தாக்கின, ஏராளமானோர் பாதிப்பு
- 22 மே 2013: மிசோஆகான் மாநிலத்திற்கு மெக்சிக்கோ படைகளை அனுப்பியது
- 1 பெப்பிரவரி 2013: மெக்சிக்கோ எண்ணெய் நிறுவனத் தலைமையகத்தில் வெடிப்பு, பலர் உயிரிழப்பு
- 21 திசம்பர் 2012: மாயா ஊழியை நம்பும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்சிக்கோவில் கூடினர்
வியாழன், செப்டெம்பர் 19, 2013
மனுவேல் என அழைக்கப்படும் வெப்பவலயப் புயல் மெக்சிக்கோவின் தென்மேற்கே தாக்கியதை அடுத்து, அதன் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், தற்போது அது முதலாம் தரப் புயலாக தரமுயர்த்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மனுவேல் தற்போது வட-மேற்கு மெக்சிக்கோவை நோக்கிச் செல்வதாகவும், இது மேலும் பெரும் சேதங்களை விளைவிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிக்கோவின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளை இங்கிரிட், மனுவேல் ஆகிய இரண்டு பெரும் புயல்கள் தாக்கின. கடந்த ஞாயிறன்று அடித்த புயல் ஏற்படுத்திய சேதத்தில் குரேரோ மாநிலத்தின் பல ஊர்கள் பாதிப்படைந்தன. குறைந்தது 80 பேர் வரையில் உயிரிழததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆங்காங்கே அனைத்து மாகாணங்களிலும் நிலச்சரிவுகளும் இடம்பெற்றுள்ளன.
லா பிண்டாடா என்ற கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கிய 58 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோயில், பாடசாலைகள் அழிந்துள்ளன.
காலநிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மிகவும் மந்த கெதியிலேயே இடம்பெற்றுவருவதாக உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் உலங்குவானூர்திகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். வீதிகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மின்கம்பிகள் அறுந்துள்ளதால் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அக்காபுல்க்கோ நகரில் சிக்கியிருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் இராணுவ உலங்குவானூர்திகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்==
- Mexico storms: Hurricane Manuel upgraded and near coast, பிபிசி, செப்டம்பர் 19, 2013
- Looting hits Acapulco as Mexico storm death toll reaches 80, என்பிசி, செப்டம்பர் 19, 2013