உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்சிக்கோ எண்ணெய் நிறுவனத் தலைமையகத்தில் வெடிப்பு, பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 1, 2013

மெக்சிக்கோ நகரில் பெமெக்சு என்ற பிரபல எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற பெரும் வெடிப்பை அடுத்து கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இடிபாடுகளிடையே சிக்கியுள்ளவர்களை மீட்க ஐநூறுக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.


இவ்வெடிப்புக்கான காரணம் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெமெக்சு நிறுவனம் அறிவித்துள்ளது.


நேற்று வியாழக்கிழமை மாலையில் அலுவலகத்தின் கீழ் மாடியில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. அந்நேரத்தில் பணியாளர்களின் மணி மாற்றம் நிகழ்ந்த நேரமாதலால், அங்கு பெருமளவு பணியாளர்கள் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மெக்சிக்கோ நகரின் முக்கிய வணிக மையத்தில் இக்கட்டடம் அமைந்துள்ளது.


மெக்சிக்கோ அரசுத்தலைவர் என்றிக்கே பீனா நீட்டோ சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகள் குறித்து அறிந்து கொண்டார். மெக்சிக்கோ நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இவ்வாறான பெரும் வெடிப்பு நிகழ்வது இதுவே முதற் தடவையாகும்.


கடந்த சில ஆண்டுகளாக பெமெக்சு நிறுவனத்தில் பல குறிப்பிடத்தக்க விபத்துகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், மெக்சிக்கோவின் வடக்கே இந்நிறுவனத்தின் எரிவாயுத் திட்டம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 30 பேர் வரை இறந்தனர்.


மூலம்

[தொகு]