யூரோ 2012: ஐரோப்பியக் கால்பந்துக் கிண்ணத்தை எசுப்பானியா வென்றது
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
திங்கள், சூலை 2, 2012
யூரோ 2012 ஐரோப்பியக் கிண்ணத்துக்காக நேற்று உக்ரேனியத் தலைநகர் கீவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலிய அணியை 4-0 என்ற இலக்கில் வீழ்த்தி எசுப்பானிய அணி கிண்ணத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. எசுப்பானியா ஏற்கனவே 2010 உலகக்கோப்பையை வென்றுள்ளதுடன் 2008 ஆம் ஆண்டில் நடந்த ஐரோப்பியக் கிண்ணத்தையும் வென்றிருந்தது.
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தினால் ஐரோப்பிய தேசிய ஆண்கள் அணிகளிடையே நடத்தப்பட்ட 14வது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்று கடந்த சூன் 8 ஆம் நாள் போலந்திலும் உக்ரைனிலும் ஆரம்பமாகின.
நேற்றைய இறுதிப் போட்டியின் முதலாவது கோலை போட்டியின் 14ஆவது நிமிடத்திலேயே எசுப்பானிய அணி சார்பாக டேவிட் சில்வா அவ்வணிக்காகப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 41வது நிமிடத்தில் எசுப்பானியாவின் ஜோர்டி ஆல்பா இரண்டாவது கோலைப் போட்டார். முதல் பாதியில் எசுப்பானியா 2-0 என்று முன்னிலை பெற்றது.
போட்டியின் இறுதி 10 நிமிடங்களில் இத்தாலி அணியில் 10 பேரே விளையாடினர். ஏற்கனவே போட்டியில் 3 மாற்று வீரர்களைக் களமிறக்கியிருந்த நிலையில் இத்தாலியின் தியாகோ மோட்டோ காயம் காரணமாக வெளியேற இத்தாலி அணி 10 பேர் கொண்ட அணியாக விளையாட அதை எசுப்பானிய அணி சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. போட்டியின் 84ஆவது நிமிடத்தில் பீட்டர் டொரெசு கோலொன்றை எடுத்தார். 88ஆவது நிமிடத்தில் உவான் மாட்டா கடைசி கோலைப் போட்டார்.
இதற்கு முன் 1964, 2008ம் ஆண்டுகளில் எசுப்பானிய அணி ஐரோப்பியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் யூரோ கிண்ணப் போட்டிகளில் 3 தடவைகள் வென்ற செருமனியின் சாதனையை எசுப்பானியா சமப்படுத்தியது. அதோடு ஐரோப்பியக் கிண்ண இறுதிப் போட்டியொன்றில் அதிக கோல்கள் பெற்ற சாதனையையும் அவ்வணி பெற்றுள்ளது.
இறுதிச் சுற்றில் 16 ஐரோப்பிய அணிகள் பங்கு பெற்றன. அரை இறுதி ஆட்டத்தில் எசுப்பானியா போர்த்துகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கிலும், மற்றொரு அரை இறுதியில் இத்தாலி செருமனியை 2-1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன.
மூலம்
[தொகு]- ஸ்பெயின் - இத்தாலி, பிபிசி, சூலை 1, 2012
- Spain crushes Italy 4-0 in Euro 2012 final, பொஸ்டன்.கொம், சூலை 2, 2012