ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் உட்பட மூவருக்கு தூக்குத்தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
- 16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
செவ்வாய், பெப்ரவரி 18, 2014
1991 ஆண்டில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும், தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இம்மூவரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க இந்திய நடுவண் அரசு காலதாமதம் செய்ததால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இந்த தண்டனையைக் குறைக்க உச்சநீதிமன்ற நீதியரசர் ப. சதாசிவம் உத்தரவிட்டார்.
இம்மூவரின் கருணை மனுக்களை நிராகரிக்க 11 ஆண்டு கால தாமதம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற நீதியரசர் ப. சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனாலும், இம்மூவரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-இன் படி இவர்களை மாநில அரசு விடுவிக்கலாம் எனவும் நீதிபதிகள் குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த மாதம் வேறொரு வழக்கில் தூக்குத்தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களைப் பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், அவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை மேற்கோள் காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையில், அவர்களுக்காக வழக்கறிஞர்கள் ராம் ஜேத்மலானி மற்றும் யோக்முக் சவுத்திரி ஆகியோர் வாதாடினார்கள்.
இன்றைய தீர்ப்பு தமக்கு ஆறுதல் தருவதாக பன்னாட்டு மன்னிப்பகத்தின் இந்தியக் கிளை கூறியுள்ளது. மரண தண்டனை முறை இந்தியாவில் ஒழிக்கப்பட வேண்டும் என அது கூறியுள்ளது.
இத்தீர்ப்பு 22 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நீதியரசர் சதாசிவம் இந்த தீர்ப்பு மூலம் தமிழர்களை காப்பாற்றி நீதியை நிலைநாட்டி உள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கருத்துத் தெரிவிக்கையில், 432, 433 ஏ சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரினார். இன்று நீதித்துறை வரலாற்றின் பொன்நாள் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்[தொகு]
- Rajiv Gandhi murder: Court commutes execution of plotters, பிபிசி, பெப்ரவரி 18, 2014
- Death commuted for 3 Rajiv Gandhi killers, இந்துத்தான் டைம்சு, பெப்ரவரி 18, 2014
- ராஜிவ் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு, பிபிசி தமிழோசை, பெப்ரவரி 18, 2014