ரியோ டின்டோ ஊழியர் நால்வருக்கு சீனா சிறைத்தண்டனை வழங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 30, 2010


லஞ்சம் வாங்கியமை, மற்றும் ஆவணங்களைக் களவாடியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக உலகின் பெரும் சுரங்க நிறுவனங்களில் ஒன்றான ரியோ டின்டோவின் பணிப்பாளர்கள் நால்வருக்கு சீன நீதிமன்றம் ஒன்று நீண்டகால சிறைத்தண்டனைகளை வழங்கித் தீர்ப்பளித்தது.


ஆத்திரேலியரான ஸ்டேர்ன் ஹூ எனபவருக்கு 10 ஆண்டு காலமும், மற்றும் மூன்று சீன நபர்களுக்கு ஏழு முதல் பதினான்கு ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறைத்தண்டனையுடன் இவர்கள் நால்வருக்கும் தண்டப் பணம் அறவிடப்பட்டதுடன், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


”ஸ்டேர்ன் ஹூவின் தண்டனை ஆத்திரேலியத் தரத்துக்கு மிக அதிகம்”, என ஆத்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிமித் தெரிவித்தார்.


வழக்கு விசாரணைகளை தூதரக அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்காதது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார். "ஆவணங்கள் களவாடியமை தொடர்பான விசாரணைகளில் பதில் வழங்கமுடியாத கேள்விகள் இன்னமும் இருப்பதாக நான் நினைக்கிறேன்”, என ஸ்டீவன் சிமித் தெரிவித்தார்.


விசாரணையின் போது, குற்றவாளிகள் நால்வரும் தாம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகப் பெற்றதாக ஒப்புக் கொண்டனர். ஸ்டேர்ன் ஹூ $600,000 அமெரிக்க டாலடர்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


சீனாவின் எஃகு தொழில் இவர்களின் இந்நடவடிக்கை மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இவர்களின் நடவடிக்கை மூலம் சென்ற ஆண்டு சீனா தனது விலை மதிப்புகளை இடைநிறுத்தியிருந்தது.


இத்தீர்ப்பு மூலம் சீனாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடைல் உறவுகள் பாதிக்கப்பட மாட்டாது என ஸ்டீவன் சிமித் தெரிவித்தார்.


தமது ஊழியர்களின் நடவடிக்கை மன்னிக்க முடியாதது எனத் தெரிவித்துள்ள ரியோ ட்ண்டோ நிறுவனம் அவர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.


ஆத்திரேலிய சுரங்க நிறுவனங்களில் இருந்து இரும்பு உலோக மண்ணை சீனா வாங்குவதற்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க ஸ்டேர்ன் ஹூ முக்கிய இடைத்தரகராக செயற்பட்டார்.


ரியோ டின்டோ ஒரு பிரித்தானிய - ஆத்திரேலியக் கூட்டு நிறுவனம் ஆகும்.

மூலம்[தொகு]