உள்ளடக்கத்துக்குச் செல்

ரொசெட்டா விண்கலம் 67பி வால்வெள்ளியின் சுற்றுவட்டத்தை அடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 6, 2014

ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் 10 ஆண்டுகள் பயணத்தின் பின்னர் வால்வெள்ளி ஒன்றை அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ரொசஎட்டா விண்கலம் ஆறரை நிமிட நேரத்திற்கு வெற்றிகரமாகத் தனது அமுக்கிகளை எரித்ததை அடுத்து 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ (67பி) வால்வெள்ளியின் சுற்றுக்குள் வந்தது. விண்வெளியின் வரலாற்றில் வால்வெள்ளி ஒன்றின் சுற்றுவட்டத்தை அடைந்த மனிதனால் செய்யப்பட்ட முதலாவது பொருள் இதுவாகும்.


"நாம் இப்போது வால்வெள்ளியில் இருக்கிறோம்!" என செருமனியில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த சில்வெயின் லோடியோ தெரிவித்தார்.


"10 ஆண்டுகள், ஐந்து மாதங்கள், 4 நாட்கள் எமது இலக்கை நோக்கிய பயணத்தின் பின்னர், சூரியனை ஐந்து தடவைகள் சுற்றி வந்த பின்னர், 6.4 பில்லியன் கிமீ தூரம் பயணித்த பின்னர், இறுதியாக "நாம் இங்கு நிற்கிறோம்" என்பதை நாம் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்," என ஈசா பணிப்பாளர் சான்-ஜாக் டொர்டெயின் தெரிவித்தார். ரொசெட்டா விண்கலம் தனது நீண்ட பயணத்தின் போது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களையும் அண்மித்திருந்தது.


2004 மார்ச் மாதத்தில் ஆரியான் ஏவூர்தி மூலம் ரொசெட்டா விண்கலம் 67பி வால்வெள்ளியை நோக்கிய நீண்ட பயணத்தை ஆரம்பித்திருந்தது. விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் போதாமையாக இருந்ததால் அதனை 2011 சூன் முதல் 31 மாதங்களுக்கு அதனை ஆழ்ந்த தூக்கத்தில் வைத்திருந்தனர்.


பனிக்கட்டியும், தூசுகளும் நிறைந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியை 2014 நவம்பரில் கீழிறக்கும்.


மூலம்

[தொகு]