ரோமான் பொலான்ஸ்கி அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட மாட்டார் என சுவிஸ் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 14, 2010

சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனர் ரோமான் பொலன்ஸ்கியை ஐக்கிய அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதில்லை என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


ரோமான் பொலான்ஸ்கி

1977ம் ஆண்டில் அமெரிக்காவில் 13 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அமெரிக்காவில் பொலான்ஸ்கி மீது குற்றம் சுமத்தப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் இவருக்கு 42 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு மேலும் நீண்ட சிறைத்தண்டனை வழங்கப்படவிருக்கிறது என்று வதந்தி கிளம்பியதை அடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் நாடு திரும்பவில்லை.


ஆஸ்கார் விருது பெற்ற 76 வயதான பொலான்ஸ்கி கடந்த செப்டம்பர் மாதம் திரைப்பட விழா ஒன்றிற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த வேளையில் அங்கு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


நாடு கடத்துவதற்கு ஏற்ற காரணங்களை அமெரிக்கா முன்வைக்கத் தவறி விட்டது என சுவிட்சர்லாந்தின் நீதித்துறை அறிவித்துள்ளது. போலான்ஸ்கி குறித்த இரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதியளிக்காத காரணத்தினால் சுவிட்சர்லாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையில், அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதில்லை என்ற சுவிட்சர்லாந்தின் தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. போலான்ஸ்கியை நாடு கடத்துமாறு நாம் தொடர்ந்து கோரி வருவோம் என அமெரிக்க அரசுத்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனாலும் அமெரிக்கா மேன்முறையீடு செய்ய முடியாது என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

மூலம்