உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியக் கிளர்ச்சிக் குழுவின் இராணுவத் தலைவர் மர்மமான முறையில் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 29, 2011

லிபியாவின் கிளர்ச்சிக் குழுவின் இராணுவத் தலைவர் ஜெனரல் அப்தல் யூனிஸ் மற்றும் அவரது உதவியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எவ்வாறு கொல்லப்பட்டார் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.


நீதிபதிகளால் விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது இவர்கள் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என கிளர்ச்சிக் குழுத் தலைவரும், இடைக்காலத் தேசியக் கவுன்சிலின் தலைவருமான முஸ்தஃபா அப்துல்-ஜலீல் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்களின் தலைவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், வேறு விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இவர்களின் இறப்புக்காக மூன்று நாட்கள் துக்கம் அனுட்டிக்கப்படும் என ஜலீல் தெரிவித்தார்.


1969 ஆண்டு புரட்சி முடிவில் லிபிய அரசுத் தலைவர் கேர்ணல் கடாபியின் கீழ் அவரது விசுவாசியாக இருந்த ஜெனரல் யூனிஸ் உட்துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் கடந்த பெப்ரவரியில் லிபிய எழுச்சி ஆரம்பமான போது கிளர்ச்சியளர்களுடன் இணைந்து செயல்பட்டார்.


இவர் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்திருந்தாலும், கடாபியின் தலைமைத்துவத்துடன் தொடர்புகளைப் பேணி வந்தார் என வதந்திகள் பரவியிருந்தன. யூனிசும் அவரது இரண்டு உதவியாளர்களும் வியாழக்கிழமை லிபியாவின் கிழக்குப் பகுதியில் கைது செய்யப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


முன்னதாக, துனீசிய எல்லையில் அமைந்துள்ள லிபியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கசாயா என்ற நகரைத் தாம் கைப்பற்றியுள்ளதாக வியாழக்கிழமை காலையில் கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர்.


லிபியக் கிளர்ச்சியாளர்களுக்குத் தூதுவ அங்கீகாரம் வழங்கும் முயற்சிக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இதுவரை 30 நாடுகள் இடைக்கால தேசியக் கவுன்சிலை அங்கீகரித்துள்ளன.


மூலம்

[தொகு]