லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சைஃப் அல்-இசுலாம் கைது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 20, 2011

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சயிப் அப் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக லிபியப் புரட்சிப் படைத் தளபதி பஷீர் அல் தலேப் நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.


1972-ம் ஆண்டு பிறந்த சயீப், கடாபி, சஃபியா கடாபி தம்பதியரின் மூத்த மகனாவார். தன்னை ஒரு புரட்சியான சீர்திருத்தவாதியாக காட்டிக் கொண்டதால் இவருக்கு மேற்கத்திய ஆதரவு கிடைத்தது. ஆனால் சமீபத்தில் முடிந்த லிபிய உள்நாட்டுப் போரில் தந்தை கடாபிக்கு உதவியாக செயல்பட்டார்.


கடாபியின் மகன்களில் அதிக அதிகாரம் கொண்ட ஒருவராகக் கருதப்பட்ட சயிப் லிபியாவை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக ஆரம்பத்தில் நம்பப்பட்டது. இவர் பன்னாட்டு நீதிமன்றத்தில் சரணடையலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. 39 வயதான அல்-இசுலாம் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்பட்டு வந்தவர். இந்நிலையில் தெற்கு லிபியாவில் உள்ள பாலைவன நகரமான ஒபாரி என்ற நகரில் இருந்து 30 கி.மீ., மேற்கில் எதிர்ப்பாளர்களிடம் பிடிபட்டார் எனவும். நைஜருக்கு வாகனங்கள் மூலம் தப்பி ஓடிய போது அவர் பிடிபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சயீப் எவ்வாறு பிடிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் ஜிந்தான் நகரில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரை எங்கு வைத்து விசாரணை செய்யலாம் என்பதை லிபிய இடைக்கால அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று பஷீர் தெரிவித்தார்.


சயீப் பிடிபட்ட செய்தி வெளியான உடன், மக்கள் வாகனங்களில் ஒலிப்பானை ஒலித்தும், கொடிகளை அசைத்தும், வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.


லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியும், அவரது மகன் முட்டாசிமும் கடந்த மாதம் எதிர்ப்பாளர்களால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]