லிபியாவில் நேட்டோவின் வான்தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, சூன் 19, 2011

லிபியாவின் தலைநகர் திரிப்பொலியின் கிழக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நேட்டோ படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக லிபியா அறிவித்துள்ளது.


தாம் திரிப்பொலியில் உள்ள ஏவுகணைத் தளம் ஒன்றின் மீது வெற்றிகரமான தாக்குதலை நடத்தியதாக நேட்டோ தெரிவித்துள்ளது. ஆனாலும் முன்னைய தாக்குதல்கள் பல அவர்களது இலக்குகளை அடையவில்லை என நேட்டோ ஒத்துக்கொண்டிருந்தது.


கடாபியின் படைகளிடம் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் ஐநா தீர்மானத்துக்கு அமைவாகவே தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என நேட்டோ தெரிவித்துள்ளது. இன்றைய தாக்குதல் குறித்து தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் நேட்டோ கூறியுள்ளது.


இன்றைய தாக்குதலில் மூன்று மாடிகள் கொண்ட வீடு ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளதாக அங்கு சென்ற பிபிசி செய்தியாலர் ஜெரமி போவன் தெரிவிக்கிறார். இரண்டு பொதுமக்களின் உடல்களை இடிபாடுகளிடையே இருந்து இழுத்து எடுப்பதைத் தாம் கண்டதாகவும் தெரிவிக்கிறார். அவ்வீட்டில் குடியிருந்த குடும்பம் ஒன்றின் அனைவரும் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.


சேதங்களைப் பார்த்த போது அது வான் தாக்குதல் ஒன்றிலேயே சேதமடைந்ததாக ஊகிக்க முடிவதாக அவர் தெரிவித்தார். "நேட்டோவின் தாக்குதலில் பொதுமக்கள் இறந்திருப்பது நிரூபிக்கப்பட்டால், அதற்காக நாம் மனம் வருத்துகிறோம்," என நேட்டோ அதிகாரி மைக் பிரேக்கன் பிபிசி இடம் தெரிவித்தார்.


லிபியாவுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நேட்டோ படையினர் இதுவரையில் 11,000 ஏவுகணைகள எறிந்திருக்கின்றனர். லிபியாவின் போராளிகள் நாட்டின் கிழக்கே மூன்றில் ஒரு பகுதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg