லிபியாவில் மக்கள் எழுச்சி, பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 19, 2011

லிபியாவில் கடந்த நான்கு நாட்களாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுபாப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் இறந்தோர் தொகை அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. வியழக்கிழமை மட்டும் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டதாக மன்னிப்பகம் அறிவித்துள்ள அதே வேளையில் நேற்று வெள்ளிக்கிழமையும் பலர் இறந்துள்ளதாக வேறு தகவல்கள் தெரிவிப்பதாக பிபிசி அறிவித்துள்ளது.


இணையத்தளங்களை அரசு தடை செய்துள்ளதுடன், பல இடங்களில் மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் முவம்மர் கதாஃபியை விமரிசிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஊடகங்கள் எச்சரித்துள்ளன.


பெரும்பாலும் ஏழை மக்கள் வாழும் பிராந்திய நகரங்களிலேயே அமைதியின்மை நிலவுகிறது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்குள்ள நிலைமைகளின் உண்மை நிலை அறியப்படாதுள்ளது.


லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை அங்கு அமைதியின்மை நிலவுவதையே காட்டுகிறது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


பெங்காசியில் உள்ள அல்-சாலா மருத்துவமனை வட்டாரங்கள் ஆதாரம் காட்டி பன்னாட்டு மன்னிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை 28 பேர் இறந்துள்ளதாகவும், பொதுவாக அவர்கள் தலைப்பகுதியில் துப்பாக்கிச் சூடுகளினாலேயே இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.


இந்த ஆர்ப்பாட்டம் குறித்து லிபியாவின் எதிர்க்கட்சி தலைவர் பைசல் ஜிப்ரில் கூறுகையில், லிபிய மக்கள் தமது பயத்தை கலைத்துள்ளனர் என்றார்.


இதற்கிடையில், அல்-பைடா என்ற கிழக்கு நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆர்ப்பாட்டக்காரகள் போராடி வருவதாக வெளிநாட்டில் வாழும் லிபியர்களை ஆதாரம் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


முவம்மர் கடாபி 1969 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். இவரே அரபு நாடு ஒன்றில் அதிக காலம் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் ஆவார்.


துனீசியா, மற்றும் எகிப்தில் இடம்பெற்ற மக்கள் புரட்சிகள் வெற்றியடைந்ததை அடுத்து, மத்திய கிழக்கின் பல நாடுகளிலும், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.


மூலம்[தொகு]