உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியாவில் வான்பறப்புத் தடைக்கு ஆதரவாக ஐநா வாக்களித்தது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 18, 2011

லிபியாவில் விமானப் பறப்புத் தடை வலயம் அமைப்பதற்கு ஆதரவாக நேற்று வியாழக்கிழமை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை வாக்களித்தது.


நியூயார்க் நகரில் இடம்பெற்ற பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. லிபியாவில் "பொது மக்களையும், பொதுமக்கள் சார்ந்த பகுதிகளையும் பாதுகாப்பதற்காக ஆக்கிரமிப்பு தவிர்ந்த அனைத்து நடவடிக்கைகளையும்" மேற்கொள்ளுவதற்கு இந்த முடிவு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு அவையில் 10 நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இரசியா, சீனா, இந்தியா, செருமனி, பிரேசில் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.


ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை அவையில் முன்வைத்தன. பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலெய்ன் ஜூப்பி இத்தீர்மானத்தை முன்வைத்து அவையில் உரையாற்றுகையில், "போர்விரும்பிகளை [நாம்] அனுமதிக்கப்போவதில்லை, பொதுமக்களை நாம் நிர்க்கதியாக விடப்போவதில்லை," என்றார்.


மேற்குலக நாடுகளால் லிபியாவின் மீது எந்நேரமும் வான் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், ஐநாவின் இத்தீர்மானத்தை அடுத்து லிபியா ”உடனடியாகப் போர் நிறுத்தத்தை” இன்று அறிவித்துள்ளது. பொதுமக்கள், மற்றும் வெளிநாட்டினரைப் பாதுகாக்க நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம் என லிபிய வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா கூசா தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அனைத்து இராணுவத்தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படுகிறது என அவர் கூறினார்.


"ஆர்ப்பாட்டம் நடைபெறும் பெங்காசி நகர் மீது நாம் இன்று தாக்குதல் நடத்தப் போகிறோம். கிளர்ச்சியாளர்கள் மீது இரக்கமோ கருணையோ காட்டப்பட மாட்டாது," என நேற்று லிபியத் தலைவர் கடாபி அறிவித்திருந்தார்.


ஐக்கிய நாடுகளின் வான்பறப்புத் தடை முடிவை அறிந்த பெங்காசி மக்கள் நேற்று மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.


மூலம்

[தொகு]