உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஆயுதநபர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 13, 2012

லிபியாவின் வடக்கு நகரான பெங்காசியில் செவ்வாய் இரவு அமெரி்க்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில், லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறித்தோபர் ஸ்டீவன்சு கொல்லப்பட்டார்.


ஆயுதங்கள் தரித்த நபர்கள் ராக்கெட் குண்டுகளை வீசித் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதலில் கிளம்பிய புகைமண்டலத்தில் மூச்சுத்திணறி அமெரிக்கத் தூதர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூன்று அமெரிக்கர்களும் 10 இலிபியர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். தூதரகம் பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்தனர்.


அமெரிக்க தூதர் பணி விடயமாக தலைநகர் திரிப்பொலியில் இருந்து பெங்காசி வந்திருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.


இசுலாம் தொடர்பாக, அமெரிக்கர் ஒருவர் தயாரித்த குறும்படம், முகமது நபிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கண்டனம் தெரிவித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இசுரேலிய அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், புனித குரானை எரித்துச் சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த டெரி ஜோன்ஸ் என்பவரும் ”இனசென்ஸ் ஒஃப் முசுலிம்சு" (முசுலிம்களின் குற்றமின்மை) என்ற இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்ததாகக் கூறப்பட்ட போதிலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது எனக் கூறியுள்ள அமெரிக்கா அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் தனது இரு போர்க் கப்பல்களை லிபியக் கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இச்சம்பவத்திற்கு அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதே வேளையில், சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஏனைய இசுலாமிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. மூன்றாவது நாளாக எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர்.


மூலம்

[தொகு]