லிபியா மோதலில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்தெம்பர் 10, 2011

லிபியாவில் கடந்த ஆறு மாதங்களாக இடம் பெற்றுவரும் மோதல்களில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இடைக்கால அரசின் சுகாதார அமைச்சர் நாஜி பர்கத் தெரிவித்துள்ளார்.


லிபியாவில் தலைவர் கடாபிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்களை ஒடுக்க கடாபி படைகள் விமான தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இந்த சண்டையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும்இ 50 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.


இது விடயமாக பர்கத் மேலும் தகவல் தருகையில், "மருத்துவமனை மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில், 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் 4 ஆயிரம் பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடாபி ராணுவம் பலரை கொன்று புதைத்துள்ளது. புதைக்கப்பட்ட இடங்களை மீண்டும் தோண்டி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. எனவே, இந்த ஆறு மாதத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். கடாபி ராணுவ வீரர்கள் 9 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதிருப்தியாளர்கள் தரப்பில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 900 பேர் கை, கால்களை இழந்துள்ளனர்' என்றார்.


மூலம்[தொகு]