லிபிய இராணுவ வாகன அணி எல்லையைத் தாண்டி நைஜரை அடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்தெம்பர் 6, 2011

லிபியாவில் இருந்து சென்ற இராணுவ வாகன அணி ஒன்று எல்லையைத் தாண்டி நைஜர் நாட்டை அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியினால் படைகளில் இணைக்கப்பட்ட துவாரெக் போராளிகளைக் கொண்ட அணியே நைஜரின் அகாதெஸ் நகரைச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. இவ்வாகன அணியில் கடாபியோ அல்லது அவரது குடும்பத்தினர் எவராவது இருந்தனரா என்பது தெரிய வரவில்லை. கடாபி இன்னும் லிபியாவிலேயே இருப்பதாக நேற்று அவரது பேச்சாளர் அறிவித்திருந்தார்.


இராணுவ வாகன அணி நேற்று திங்கட்கிழமை மாலை அகாதஸ் நகரை சென்றடைந்ததாக பிரான்ஸ் மற்றும் நைஜரின் இராணுவத் தகவல்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 200 முதல் 250 இராணுவ வாகனங்கள் இவ்வணியில் இருந்தன. இவற்றுக்கு நைஜர் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.


மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோ கடாபிக்கு தஞ்சம் அளிக்கத் தயாரென முன்னர் அறிவித்திருந்தது. கடாபியின் மனைவி, இரு மகன்கள், மற்றும் ஒரு மகள் ஏற்கனவே அல்ஜீரியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.


இப்படியான பெரிய வாகன அணி நேட்டோவுக்குத் தெரியாமல் சென்றிருக்க முடியாது என லிபியாவின் இடைக்கால அரசு அதிகாரிகள் நம்புவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


கடாபியின் பாதுகாப்பு உயர் தலைவர் மன்சூர் டோ என்பவர் ஏற்கனவே நைஜருக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]