உள்ளடக்கத்துக்குச் செல்

லைபீரிய அதிபர் உட்பட மூன்று பெண்களுக்கு 2011 நோபல் அமைதிப் பரிசு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 7, 2011

அமைதிக்கான நோபல் பரிசு இவ்வாண்டு மூன்று பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லைபீரியக் குடியரசுத் தலைவர் எலன் சர்லீஃப், லைபீரியாவின் லேமா குபோவீ, ஏமனைச் சேர்ந்த தவக்குல் கர்மான் ஆகியோர் பரிசைப் பகிர்ந்து கொள்வர்.


"பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான உரிமைகளுக்காக வன்முறையற்ற வழியில் போராடியதற்காக" இவர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.


எலன் சர்லீஃப் லைபீரியாவின் தற்போதைய அதிபர் ஆவார். 2006 ஆம் ஆண்டில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆப்பிரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் இவர். லைபீரியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பாடுபட்டவர். மேலும் பெண்களின் நிலையை வலுப்படுத்தவும், சமூக மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பாடுபட்டவர்.


லேமா குபோவீ ஒரு அமைதி ஆர்வலர். லைபீரியாவில் அமைதிக்கான இயக்கத்தை ஆரம்பித்து 2-வது உள்நாட்டுப்போரை 2003-ல் முடிவுக்குக் கொண்டு வந்தவர். மேலும் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்புக்கு உறுதி ஏற்படுத்திக் கொடுத்தவர்.


தவக்குல் கர்மான் மத்திய கிழக்கின் ஏமன் நாட்டில் மக்களாட்சிக்காகவும் அமைதிக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் முக்கியப் பங்காற்றியவர். நோபல் அமைதிப் பரிசு பெறும் முதலாவது அரபுப் பெண் இவராவார்.


"இந்த மூவருக்கும் அளிக்கப்பட்டுள்ள நோபல் பரிசு மூலம் இன்னும் பல்வேறு நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதை முடிவுக்குக் கொண்டுவர உதவிபுரியும்," என நோபல் அமைதிப் பரிசுக்கான குழுவின் தலைவர் தோர்ப்ஜோன் ஜாக்லண்டு தெரிவித்தார்.


மூலம்

[தொகு]