வங்காளதேசத்தில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களும் காவல்துறையினரும் மோதல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 14, 2010

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்தனர். எதிர்க்கட்சித் தலைவி காலிடா சியா 30 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டில் இருந்து அவரை வெளியேற்றப் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையை அடுத்தே அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.


எதிர்க்கட்சித் தலைவி காலிடா சியா

இதே வேளையில், நாட்டின் மேற்குப் பகுதியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் மூவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று ஆர்ப்பாட்டத்துக்கும் இந்தக் குண்டுத்தாக்குதலுக்கும் இடையே ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பதைத் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.


வங்காளதேசத் தேசியக் கட்சியின் தலைவர் காலிடா சியா டாக்கவில் உள்ள இராணுவத் தளத்தினுள் உள்ள அவரது வீட்டை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை அவகாசம் தந்தது. 1982 ஆம் ஆண்டில் இருந்து இந்த வீட்டை காலிடா சியா அரசிடம் இருந்து குத்தகைக்குப் பெற்றிருந்தார். ஆனால் அரசு சென்ற ஆண்டு அந்த உடன்பாட்டை சட்டவிரோதமானது எனக் கூறி ரத்துச் செய்திருந்தது.


வீட்டில் இருந்து இராணுவத்தினரால் கலைக்கப்பட்ட காலிடா சியா கண்ணீருடன் தனது கட்சி அலுவலகத்துக்கு சென்றார். 1981 இல் அவரது கணவரும் முன்னாள் அரசுத்தலைவருமான சியா-உல்-ரகுமான் கொலை செய்யப்பட்டதை அடுத்து 1982 ஆம் ஆண்டில் இவ்வீட்டை அரசு திருமதி சியாவுக்கு குத்தகைக்குக் கொடுத்திருந்தது.


பிரதமர் சேக் ஹசீனா இந்தக் குத்தகை உடன்பாட்டை சென்ற ஆண்டு இரத்துச் செய்திருந்தார். அரசுக்கெதிராக ஞாயிற்றுக்கிழமை அன்று நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.


மூலம்