உள்ளடக்கத்துக்குச் செல்

வட-இந்திய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு, பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 21, 2013

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டியுள்ளது. அரிதுவார் நகரில் கங்கை ஆற்றில் இருந்து குறைந்தது 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை அரிதுவாரில் இடம்பெற்ற பெரும் மழை அங்கு வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. மீட்புப் பணியாளர்கள் அங்கு உயிர் தப்பியோரைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு உதவியாக துணை ராணுவப் படையினர், மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தில்லியில் யமுனை நதியில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. அரியானா மாநிலத்தில் உள்ள அத்தினிகுண்ட் அணையில் இருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 9 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.


கேதார் நாத் புனிதத்தலத்திற்கு ஆன்மிகப் பயணம் செய்த 50,000 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். 500 இற்கும் அதிகமான சாலைகள், மற்றும் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. கேதார் கட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு கிராமம் வெள்ளத்தில் அடியோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.


இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளிலும் வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. உத்தர்கண்ட் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது பெருமழை பெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று இந்திய ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.


மூலம்

[தொகு]