உள்ளடக்கத்துக்குச் செல்

வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல் காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 19, 2011

வட கொரியா தலைவர் கிம் ஜொங்-இல் தனது 69வது அகவையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை அன்று காலமானதாக என அந்நாட்டின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்

தலைநகருக்கு வெளியே தொடருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில் இருந்து சுகவீனமுற்றிருந்த கிம் ஜொங்-இல் பல மாதங்களாகப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இவரது மூன்றாம் மகன் கிம் ஜொங்-உன் தலைமைப் பதவியைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இறந்த தலைவரின் இறுதிச் சடங்குகள் தலைநகர் பியோங்யாங் நகரில் டிசம்பர் 28 இல் இடம்பெறும். கிம் ஜொங்-உன் தலைமை வகிப்பார்.


கிம் ஜொங்-இல் 1994 ஆம் ஆண்டில் அவரது தந்தை கிம் உல்-சுங் இறந்த பின்னர் கம்யூனிச நாட்டின் தலைவரானார். இவர் தலைமைப் பொறுப்பு ஏற்ற சில மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தினால் ஏறத்தாழ 2 மில்லியன் பேர் உயிரிழந்தனர். மனித உரிமை மீறல்கள், மற்றும் அணுவாயுதப் பயன்பாடு போன்றவற்றினால் உலக நாடுகள் வட கொரியாவை ஒதுக்கியே வைத்துள்ளன. சீனா போன்ற ஒரு சில நாடுகளே இந்நாட்டுடன் நட்புறவு கொண்டுள்ளன. 2006 ஆம் ஆண்டில் வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.


மூலம்

[தொகு]