வட கொரியா நீண்ட தூர ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 12, 2012

வட கொரியா நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக இன்று உள்ளூர் நேரம் 09:49 மணிக்கு ஏவியது. செயற்கைக் கோளொன்றைத் தாங்கிச் சென்ற இந்த ஏவுகணை அதனை வெற்றிகரமாக பூமியின் சுற்றுப் பாதையில் செலுத்தியது.


வட கொரியாவின் மேற்குக் கரைப் பகுதியில் இருந்து இந்த மூன்று கட்ட ஏவுகணை செலுத்தப்பட்டது. வட கொரியாவின் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதை ஐக்கிய அமெரிக்கா உறுதிப் படுத்தியது.


நீண்ட தூர ஏவுகணையைச் சோதிக்கவே வட கொரியா இச்செயலில் இறங்கியது என தென் கொரியா, அமெரிக்கா, சப்பான் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.


சூன் 2009 இல் வட கொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் அனைத்துக்கும் ஐக்கிய நாடுகள் தடை விதித்திருந்தது. வட கொரியாவின் இரண்டாவது அணுசக்திச் சோதனையை அடுத்தே ஐக்கிய நாடுகள் இந்த முடிவை அறிவித்திருந்தது. இன்றை ஏவுகணைச் சோதனை ஐநா விதிமுறைகளை மீறும் செயலென ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.


அமெரிக்கப் பெரும்பரப்பைத் தாக்கக்கூடிய நீண்ட தூரம் பாயும் ஏவுகணை தயாரிக்கும் முயர்சியில் வட கொரியா இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.


இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வட கொரியா ஏவிய ஏவுகணை ஏவிய சில நிமிட நேரத்தில் மஞ்சள் கடலில் வீழ்ந்து வெடித்தது. 2006, 2009 ஆம் ஆண்டுகளில் இந்தக் கம்யூனிச நாடு இரண்டு அணுவாயுதச் சோதனைகளையும் நடத்தியிருந்தது.


மூலம்[தொகு]