உள்ளடக்கத்துக்குச் செல்

வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 22, 2013

பிரபல வயலின் இசைக் கலைஞரும் இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இறுதி காலத்தில் உடல்நலம் குன்றியிருந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மகன் லால்குடி கிருஷ்ணனும் மகள் லால்குடி விஜயலட்சுமியும் வயலின் இசைக் கலைஞர்களாக உள்ளனர்.


தமிழிசைச் சங்கத்தின் இசைப்பேரறிஞர் விருது, இந்திய அரசாங்கத்தின் பத்ம பூசன், பத்மசிறீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள ஜெயராமன் ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் இசைப்பணி ஆற்றியுள்ளார். தனி மற்றும் பக்கவாத்திய வயலின் கலைஞராக விளங்கியதோடு, பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர், இசையாசிரியர் என இசையின் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்தவர்.


புகழ்வாய்ந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்களாகிய காலஞ்சென்ற அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், கே. வீ. நாராயணசுவாமி, மகாராஜபுரம் சந்தானம், டி. கே. ஜெயராமன் ஆகியோருக்கு லால்குடி ஜெயராமன் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்; புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்.


சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்களாக விளங்கும் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, டி. வீ. சங்கரநாராயணன், டி. என். சேஷகோபாலன் ஆகியோருக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ள லால்குடி ஜெயராமன், எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார். இவர்களில் லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலக்ஷ்மி, விட்டல் இராமமூர்த்தி, பத்மா சங்கர், உசா இராஜகோபாலன், பாம்பே ஜெயசிறீ, சாகீதராமன், விசாகா ஹரி ஆகியோர் குறிப்பிடத்தக்க கலைஞர்களாக இன்றைய கருநாடக இசையுலகில் விளங்குகின்றனர்.


மூலம்

[தொகு]