வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக விக்கிப்பீடியா குரல்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், சனவரி 17, 2012

அமெரிக்க அரசு வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டமூல வரைபை அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இணையத்தின் கட்டற்ற கலைக்களஞ்சியமான ஆங்கில விக்கிப்பீடியா நாளை புதன்கிழமை அன்று 24 மணி நேரம் இயங்க மாட்டாதெனெ அதன் நிறுவனர் ஜிம்மி வேல்சு டுவிட்டரில் அறிவித்துள்ளார்.


மாணவர்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கை ஒன்றில், "உங்கள் வீட்டுப்பாடங்களை முன்கூட்டியே செய்து விடுங்கள். புதன்கிழமை அன்று விக்கிப்பீடியா கெட்ட சட்டம் ஒன்றை எதிர்க்கிறது!" என எழுதியுள்ளார்.


வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டம் (Stop Online Piracy Act, SOPA) தற்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டமூலம் ஏற்கனவே ஹாலிவுட், வணிக மென்பொருள் கூட்டமைப்பு போன்ற பல அமைப்புகளினதும் மற்றும் இசை உலகத்தினரினதும் ஆதரவைப் பெற்றுள்ளது.


அதே வேளையில், கூகுள், டுவிட்டர், விக்கிப்பீடியா, யாஹூ! போன்ற இணையத் தளங்கள் இச்சட்டமூலத்துக்கு எதிராக சென்ற மாதம் குரல் கொடுத்திருந்தன. "தற்போது சீனா, மலேசியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் உள்ள இணையத் தணிக்கை போன்று அமெரிக்க அரசுக்கும் இது போன்ற அதிகாரம் கிடைக்கும்," என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


இவ்வரைவு சட்டமானால், அமெரிக்க சட்டச் செயலுறுத்தும் முகவர்கள் மற்றும் பதிப்புரிமையாளர்களால் இணையத்தில் பதிப்புரிமை உடைய அறிவுசார் சொத்துரிமை மற்றும் போலி பொருட்களின் விற்பனையை எதிர்த்து போராடும் திறனை கூட்டும்.


கடந்த சனவரி 15 ஆம் நாள் விக்கிப்பீடியா தனது 11வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 282 மொழிகளில் 20 மில்லியன் கட்டுரைகளை அது கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மூலம்[தொகு]