உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிலீக்ஸ்: ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கருணாநிதியின் உண்ணாவிரத 'நாடகம்'

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 24, 2011

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி அப்போது தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தது, திமுகவின் நடுவண் அமைச்சர்கள் பதவி விலகப் போவதாக அறிவித்தது ஆகியவை மக்களைத் திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று நடுவண் புடவைத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கசிந்துள்ளது.


விக்கிலீக்சிடம் இருந்து த இந்து நாளேடு தகவல் பெற்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 2008ல் அமெரிக்கத் துணைத்தூதர் ஆண்ட்ரூ சிம்கின் என்பவரை தயாநிதி மாறன் சந்தித்து இத்தகவல்களைக் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தந்திருக்கிறது.


2008 அக்டோபர் 14 இல் சர்வகட்சி சந்திப்புக்கு நாடாளுமன்றத் தமிழக உறுப்பினர்கள் இணங்கியிருந்தனர். கருணாநிதி தலைமையில் இந்தச் சந்திப்பை நடத்துவதற்கும் இலங்கையில் அக்டோபர் 28 இல் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்திய அரசாங்கம் தோல்வி கண்டால் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் அந்தக் காலக்கெடு முடிவடைவதற்கு இரு நாட்களுக்கு முன்பாகவே அச்சமயம் வெளிவிவகார அமைச்சராகவிருந்த பிரணாப் முகர்ச்சியின் பயணத்தைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்தல், இலங்கையின் சிறப்புத் தூதுவருடன் நடவடிக்கையில் ஈடுபடுதல், இலங்கைத் தமிழருக்கு மனிதாபிமான உதவியை அனுப்பி வைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைகள் கருணாநிதியை திருப்திப்படுத்துவதாகக் காணப்பட்டன.


ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது மெரீனா கடற்கரைக்கு வந்து திடீரென உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் கருணாநிதி. அவரது தலைமாட்டில் துணைவி ராசாத்தி அம்மாளும், கால்மாட்டில் மனைவி தயாளு அம்மாளும் உட்கார்ந்திருக்க சில மணி நேரம் படுத்தபடி இருந்தார் கருணாநிதி. பின்னர் ஈழத்தில் போர் முடிந்து விட்டதாகக் கூறி கிளம்பிச் சென்றார். இந்த அதிரடி உண்ணாவிரதம், அது முடிந்த விதம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தின. இவையெல்லாம் தற்போது நாடகம் என்று தயாநிதி மாறன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.


ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.


இதற்கிடையில், திமுக பற்றி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தான் கூறியதாக தெரிவிக்கப்படும் விக்கிலீக்ஸ் செய்திகளை பிரசுரித்தமைக்கு ஆங்கில நாளேடான இந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் இல்லையேல், 5 கோடி ரூபாய் கேட்டு தான் மான நட்ட வழக்குத் தொடர இருப்பதாக தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]